சிகிரியாவில் உள்ள இலங்கை விமானப்படையின் (SLAF) பாதுகாப்பு சோதனைச் சாவடியில் இருந்து திருடப்பட்ட T-56 துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்களை 450,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற விமானப்படை வீரர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் கொலைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்புள்ளை பிரதேசத்தில் நேற்று (01) விமானப்படை அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் பேரில், தம்பியகம, ரிதியகம பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை பொலிஸார் மீட்டுள்ளனர்.
தம்புள்ளையைச் சேர்ந்த சந்தேக நபர் முன்னணி விமானப்படை வீரர் என குற்றப் புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.சந்தேகநபர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் கடமையாற்றிய மற்றுமொரு விமானப்படை வீரரிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை திருடியுள்ளார்.
இந்த திருட்டுக்கு விமானப்படை வீரருக்கு உதவிய மற்றுமொரு நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சீகிரிய பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் இன்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.