ஆசிரியர் இடமாற்ற சபையை கலைத்தமை சட்டத்திற்கு புறம்பான மற்றும் தன்னிச்சையான தீர்மானம் என்ற குற்றச்சாட்டை நிராகரித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, O/L மற்றும் A/L வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்கள் தவிர்ந்த ஆசிரியர் இடமாற்றங்களை ஆசிரியர் இடமாற்ற சபையின் அங்கீகாரத்திற்கு அமைய மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றுநோய் காரணமாக 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இடமாற்றங்கள் நடைபெறாததால், 2022 ஆம் ஆண்டளவில் சுமார் 14,500 ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
ஜனாதிபதி செயலகம் ஆசிரியர் இடமாற்றச் சபைகளை சட்ட விரோதமாகவும் தன்னிச்சையாகவும் கலைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
8,893 இடமாற்றங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், A/L மற்றும் O/L வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் தவிர்ந்த ஏனைய ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
O/L பரீட்சை இந்த வருடம் மே மாதத்திலும் A/L பரீட்சை இந்த வருடம் ஒக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறவுள்ளது. O/L மற்றும் A/L வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களை இச்சமயத்தில் இடமாற்றம் செய்தால் அது அந்த மாணவர்களைப் பாதிக்கும். O/L மற்றும் A/L ஆசிரியர்களின் இடமாற்றங்களை ஒத்திவைக்கவும், ஆசிரியர் இடமாற்ற சபையின் அங்கீகாரத்தின்படி திட்டமிடப்பட்ட ஏனைய இடமாற்றங்களை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது” என்று அவர் கூறினார்.