பிரித்தானியாவின் விமான நிலையங்கள் அனைத்தும் சிவப்பு சமிஞ்சை,அவசர பாதுகாப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கென்யா நாட்டின் போயிங் விமானம் தலைநகர் நைரோபியில் இருந்து புறப்பட்டு,லண்டன் நேரப்படி மாலை 3.45க்கு லண்டன் ஹீத் ரூ விமான நிலையத்தை வந்தடைய வேண்டும்.ஆனால் விமானத்தில் நடந்த சில அசம்பாவிதங்களை,விமானி ஏற்கனவே கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்து இருந்தார்.இதனை அடுத்து குறித்த கென்யா நாட்டு விமானத்தில் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு கருதியது.
இதனை அடுத்து நோத்-ஹால்ட் விமான நிலையத்தில் இருந்து 2அதிநவீன RAF,டைஃபூ விமானங்கள் விண்ணில் சீறிப் பறந்து சென்று கென்ய விமானத்தை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தார்கள்.தாம் சொல்வது போல நடக்காவிட்டால்,விமானம் சுட்டு வீழ்த்தப்படும் என்ற எச்சரிக்கையும் அவர்கள் அறிவுறுத்தி இருந்தார்கள்.இதனை அடுத்து விமானத்தை லண்டன் மத்திய நகர பகுதிக்கு செல்லவிடாமல் தடுத்து ஒதுக்குப்புறமாக உள்ள Stansted விமான நிலையம் நோக்கிப்பறக்க கட்டளை இட்டார்கள்.Stansted விமான நிலையத்தில் பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சடுதியாகச் செய்யப்பட்ட நிலையில் கென்ய விமானம் அங்கே தரையிறங்கியது.
ஆயுதம் தாங்கிய பொலிஸார் விமானத்தினுள் சென்று ஒவ்வொருவராக விசாரணை செய்து அவர்களை வெளியே செல்ல அனுமதித்தார்கள்.மேலும் அங்கே யார் யார் கைதாகியுள்ளார்கள் என்ற விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.விரைவில் இது குறித்த அறிக்கை ஒன்றை பொலிஸார் வெளியிட உள்ளார்கள் என அறியப்படுகிறது.