வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரி் பங்கேற்று விளையாடி வருகிறது.
இதில் முதல் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி தற்போது துவங்கி நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
வங்கதேச இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய வங்கதேச அணி மொமினுல் ஹக் 84 (157) மட்டுமே சிறப்பாக விளையாடி பெரிய ஸ்கோர் அடித்தார். அடுத்து ஷான்டோ 24 (57), முஷ்பிகுர் ரஹீம் 26 (46), லிடன் தாஸ் 25 (26), ஆகியோரை தவிர யாரும் 20+ ரன்களை அடிக்காததால், வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227/10 ரன்களுக்கு சுருண்டது.
இந்திய இன்னிங்ஸ்:
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய இந்திய அணியில் ரிஷப் பந்த் 93 (105), ஷ்ரேயஸ் ஐயர் 87 (105) ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தனர். இருப்பினும் புஜாரா, கோலி ஆகியோர் தலா 24 ரன்களும், கேப்டன் கே.எல்.ராகுல் 10 (45) போன்றவர்கள் படுமோசமாக விளையாடியும் சொதப்பியதால், இந்திய அணி முதல் இனினங்ஸில் 314/10 ரன்களை மட்டும் சேர்த்தது.
வங்கதேச 2ஆவது இன்னிங்ஸ்:
இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கிய வங்கதேச அணியில் ஒபனர் ஜகிர் ஹாசன் 51 (135), லிடன் தாஸ் 73 (98) ஆகியோர் அரை சதம் கடந்த நிலையில், இறுதி கட்டத்தில் நூரூல் ஹாசன் 31 (29), டஸ்கின் அகமது 31 (46) இருவரும் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், வங்கதேச அணி 231/10 ரன்களை சேர்த்து, இந்தியாவுக்கு 145 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
இந்தியா 2ஆவது இன்னிங்ஸ், அடுத்தடுத்து விக்கெட்:
145 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கியுள்ள இந்திய அணியில் ஓபனர்கள் ஷுப்மன் கில் 7 (35), கே.எல்ராகுல் 2 (7) இருவரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. தொடர்ந்து புஜாரா 6 (12), விராட் கோலி 1 (22) இருவரும் அடுத்தடுத்து நடையைக் கட்டியதால், இந்திய அணி 37/4 என திணறியது.
அடுத்து அக்சர் படேல் 26 (55), உனாத்கட் 3 (8) இருவரும் களத்தில் இருந்தபோது, மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்தியாவுக்கு 100 ரன்கள் தேவைப்பட்டது.
4ஆவது நாள் ஆட்டம்:
இதனைத் தொடர்ந்து நான்காவது நாள் ஆட்டம் துவங்கி நடைபெற்றது. அப்போது உனாத்கட் 13 (16), அக்சர் படேல் 34 (69), ரிஷப் பந்த் 9 (13) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்ததால், இந்திய அணி 74/7 என படுமோசமாக திணறியது.
இதனைத் தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயர், ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்க்க ஆரம்பித்தார்கள். இதனால், இந்திய அணி மெல்ல வெற்றியை நோக்கி நெருங்கி வந்தது. இறுதியில் இந்தய அணி 145/8 ரன்களை சேர்த்து, த்ரில் வெற்றியைப் பெற்றது. ஷ்ரேயஸ் ஐயர் 29 (46), அஸ்வின் 42 (62) இருவரும் களத்தில் இருந்தார்கள்.
இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்:
இப்போட்டிக்கு முன்புவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேnஇயா (76.92%) முதலிடத்திலும், இந்தியா (55.77%), தென்னாப்பிரிக்கா (54.55) ஆகிய அணிகள் 2,3 இடத்திலும் இருந்தன. தற்போது இந்தியா வெற்றியைப் பெற்ற பிறகு, இந்த புள்ளிப்பட்டியலில் மாற்றம் ஏற்படவில்லை. இந்தியா 58.93% புள்ளிகளை பெற்று, பைனல் வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இருக்கிறது. இதில் இந்தியா 4-1 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றால், இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட முடியும். தென்னாப்பிரிக்கா வெளியேறும் நிலை ஏற்படும்.