நேபாளத்தில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டி இப்போது தான் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த விமானம் முன்பு கிங்பிஷர் ஏர்லைன்ஸிடம் இருந்ததாகத் தெரிய வந்துள்ளது. பொதுவாக அனைத்து வகையான போக்குவரத்தைக் காட்டிலும் விமான போக்குவரத்து பாதுகாப்பானது. ஒப்பீட்டளவில் ஓராண்டில் விமான விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை ரொம்பவே குறைவாகவே இருக்கிறது.
இருந்தாலும், விமான விபத்து ஏற்பட்டால் அதன் பாதிப்புகள் ரொம்பவே மோசமாக இருக்கும். இதனால் பெரும்பாலான நேரங்களில் விமான விபத்து ஏற்படும் போது, அதில் யாராலும் தப்பிக்க முடியாது.
அப்படியொரு மோசமான விபத்து தான் நேபாளத்தில் நேற்று நடந்தது. சமீப காலங்களில் நடந்த மிக மோசமான விபத்தாக இந்த விமான விபத்து இருக்கிறது. உலகத்தையே அதிர வைத்த இந்த விபத்து குறித்து தொடர்ச்சியாகப் பல ஷாக் தகவல்கள் வெளியாகி வருகிறது. விமானம் கீழே விழுந்து நொறுங்கும் முன்பே அதில் தீப்பற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது. உள்ளே இருந்த இந்தியப் பயணி ஒருவர் விபத்து நடந்த சமயத்தில் பேஸ்புக் லைவில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
அந்த வீடியோவும் இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. விபத்தில் சிக்கிய இந்த விமானம் ஏடிஆர் 72 ரக விமானமாகும். இது நேபாளத்தில் உள்ள பிரபல எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது.. இந்த விமானம் நேற்று காலை 10:30 மணியளவில் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், விமானம் தரையிறங்கத் தொடங்கிய போது இந்த விபத்து நடந்துவிட்டது.
பழைய விமான நிலையத்திற்கும் பொக்காரா புதிய ஏர்போர்டிற்கும் இடையே உள்ள சேதி ஆற்றின் கரையில் விமானம் விழுந்து நொறுங்கியது. விபத்து நடந்த போது மொத்தம் 5 இந்தியர்கள் உட்பட 68 பயணிகள் 4 பேர் கொண்ட விமான குழு இதில் பயணித்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதில் பயணித்த இந்தியர்களும் உயிரிழந்துவிட்டனர்.
நேபாள வரலாற்றில் மிக மோசமான விமான விபத்தாக இது உள்ளது. இதற்கிடையே சிரியம் ஃப்ளீட்ஸ் தரவுகளின்படி, இந்த விமானம் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் ஏர்லைன்ஸிடம் இருந்தது தெரிய வந்துள்ளது. அதாவது இந்த விமானம் கடந்த 2007இல் முதலில் கிங்பிஷர் ஏர்லைன்ஸுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இது தாய்லாந்தின் நோக் ஏர் நிறுவனத்தால் வாங்கப்பட்டது.. அந்த நிறுவனத்தில் இருந்து கடந்த 2019இல் இந்த விமானம் நேபாளத்தின் எட்டி ஏர்லைன்ஸுக்கு விற்கப்பட்டது.
விஜய் மல்லையாவிடம் முதலில் இந்த இந்த விமானம் தான் பலரது கைகளை மாறி ஏட்டி ஏர்லைன்சிடம் சென்றுள்ளது. இந்த விமானத்தை இன்வெஸ்டெக் வங்கி நிர்வகித்து வரும் நிலையில், விமானம் டர்போ லீசிங்கிற்கு சொந்தமானது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. நேபாள விமானத்து வரலாற்றில் இந்த சிறிய ரக ATR-72 விமானம் விபத்தில் சிக்குவது இதுவே முதல்முறையாகும். ATR-72 என்பது பிரெஞ்சின் ஏரோஸ்பேஷியேல் மற்றும் இத்தாலியின் ஏரிடாலியா இணைந்து தயாரித்த விமானாகும். இந்த விமானத்தில் அதிகபட்சம் 72 பேர் பயணிக்க முடியும். இதன் காரணமாகவே இதற்கு ATR-72 என்று பெயர் வந்தது.
விபத்து நடந்த போது வானிலை மோசமாக இல்லை. தெளிவாகவே இருந்துள்ளது. இதனால் மோசமான வானிலை விபத்திற்குக் காரணமாக இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு அல்லது விமானியின் தவறு இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பைலட் சோர்வடைந்தது கூட விபத்திற்குக் காரணமாக இருக்கலாம். இருப்பினும், விரிவான விசாரணைக்குப் பின்னரே விபத்திற்கான காரணம் தெரிய வரும். இந்த விமானத்தில் கருப்பு பெட்டி இப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.