பல மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி பதவி விலகி புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் போது ஆளுநர்கள் ராஜினாமா செய்வது, பிரதமர் பதவி விலகும் போது அமைச்சரவை இராஜினாமா செய்வதற்கு சமம் என ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தற்போதைய ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர், அந்த மரபுப்படி ஆளுநர்கள் பதவி விலகாததால், அவர்கள் பதவி விலகுவதற்கு ஜனாதிபதி சிறிது காலம் காத்திருந்தார் எனவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பல மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. இதில் வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களும் உள்ளடங்குவதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த ஆளுநர்கள் ராஜினாமா செய்த பின்னர், பிரிட்டன் விஜயத்தில் இருந்து ஜனாதிபதி நாடு திரும்பிய பிறகு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத், எதிர்வரும் சில தினங்களில் ஆளுநர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய நேரிடும் என சூசகமாகத் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்றிரவு (6) இடம்பெற்ற வெசாக் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திருமதி அனுராதா யஹம்பத், ஆளுநராக மாகாண மக்களுக்கு உரையாற்றும் கடைசி சந்தர்ப்பம் இதுவாக இருக்கலாம் என தெரிவித்தார்.