புதுடெல்லி, அல்கொய்தா சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் இந்தியாவில் இருந்து இணைந்து செயல்பட்டதாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 2017-ல், மவுலானா முகமது அப்துல் ரஹ்மான் கஸ்மி, முகமது ஆசிப், ஜாபர் மசூத் மற்றும் அப்துல் சமி ஆகிய 4 பேர் அல்கொய்தா அமைப்பின் இந்திய பிரிவு போல இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. ரஹ்மான் கஸ்மி ஒரு அமைப்பை நிறுவி அதில் ஏராளமான மாணவர்களை சேர்த்து, பயங்கரவாத செயல்களுக்கு அவர்களை பயன்படுத்த திட்டமிட்டதாக டெல்லி காவல்துறை கஸ்மி உள்ளிட்டவர்களை கைது செய்தது. அவர்களுக்கு எதிராக வழக்கு நடந்து வந்தது. சிறப்பு நீதிபதி சஞ்சய் கானவால் இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்தார். இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை, மேற்கண்ட 4 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். மேலும் 2 பேரை விடுதலை செய்தும் அறிவிக்கப்பட்டது. நேற்று இவர்களுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. பயங்கரவாதிகள் 4 பேருக்கும் 7 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஏற்கனவே 7 ஆண்டுகள், 3 மாதங்கள் சிறையில் கழித்து இருப்பதால் அதுவும் தண்டனை காலமாக கழிக்கப்பட இருப்பதாக அவர்களது வக்கீல் தெரிவித்தார்.