கனடாவிற்கு கப்பல் பயணம் மேற்கொண்ட 303 இலங்கையர்களில் ஒரு தொகுதியினர் தமது வீடுகளிற்கு திரும்பியுள்ளனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த 151 பேர் கடந்த 28ஆம் திகதி நாடு- வீடு- திரும்பியிருந்தனர்.
அவர்களில் சிலர் 4 மாதங்களின் பின் வீடு திரும்பினர். ஆனால் பெரும்பாலானவர்கள் 6 மாதங்கள் வரையான காலத்தை தென்கிழக்காசிய நாடுகளில் கழித்துள்ளனர். சிலர் 8 மாதங்களிற்கும் அதிகமான காலத்தை அங்கு கழித்துள்ளனர்.
தற்போது வீடு திரும்பியவர்கள் சிலர் பேசிய போது, வியட்நாமில் அகதி அந்தஸ்திற்காக காத்திருக்கும் காலத்தில் வட்டி, கடன் தொகை அதிகரித்து விடும் என்ற அச்சத்தில் நாடு திரும்பியதாக தெரிவித்தனர்.
காரணம், அவர்கள் அனைவரும் கடன் வாங்கியும், வீடு அல்லது காணிகளை அடமானம் வைத்து, இந்த பயணத்திற்காக பணம் திரட்டியுள்ளனர்.
இந்த பயணத்திற்காக ரூ.20 இலட்சம் வழங்கிய இளைஞர் ஒருவர், தான் மாதாந்தம் ரூ.60,000 வட்டி செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.
அதிக பணம் செலுத்தியவர்கள், சொத்துக்களை ஈடு வைத்தவர்களே அனேகமாக நாடு திரும்பியதாக தெரிவித்தார்.
நாடு திரும்பியவர்கள், முன்னர் செய்த தொழில்களை மீள ஆரம்பிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை நிதியுதவி செய்வது தொடர்பான கோரிக்கையை தமது தலையகத்திற்கு விடுத்துள்ளதாக ஐஓஎம் அலுவலகத்தினர் தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கனடாவிற்கு மேற்கொள்ளப்பட்ட இந்த கப்பல் பயணம் குறித்த பல தகவல்களை ஏற்கெனவே வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, இந்த பயணத்தில் இதுவரை வெளியாகாத மேலும் பல பின்னணி தகவல்களை இப்பொழுது வெளியிடுகிறோம்.
மியான்மர் இராணுவத்தின் துணையுடன் பயணம்
தற்போது இராணுவ ஆட்சி நடந்து கொண்டிருக்கும் மியான்மரில் இருந்து கடந்த ஒக்ரோபர் 9ஆம் திகதி அதிகாலை 303 இலங்கையர்களும் கனடா கனவுடன் கப்பலேறினர்.மியான்மரின் யாங்கூன் நகரத்திலிருந்து சுமார் 2 மணித்தியால பேருந்து பயண தூரத்தில் உள்ள கடற்கரையொன்றிலிருந்து கப்பல் பயணம் ஆரம்பித்தது. மியான்மரில் பதிவு செய்யப்பட்ட Lady R3 என்ற சிறிய கப்பலில் கடல் பயணம் ஆரம்பித்தது.
கப்பல் பயணத்திற்காக கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே இலங்கையிலிருந்து ஆட்கள் விமானம் மூலம் மியான்மரிற்கு அழைத்து செல்லப்பட தொடங்கினர். கடந்த ஏப்ரலில் இருந்து சுமார் 6 மாதங்கள் மியான்மரில் கப்பல் பயணத்திற்காக காத்திருந்த பலருடன் பேசினோம். இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்டவர்கள் சிறுசிறு குழுக்களாக மியான்மரில் சிறிய அறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களிற்கு மியான்மர் இராணுவத்தினாலோ, பொலிசாராலோ சிக்கல் ஏற்படவில்லை.
இராணுவத்திற்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதால் யாரும் பயப்படத் தேவையில்லையென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இலங்கையில் பல உள்ளூர் முகவர்கள் மூலம் ஆட்கள் திரட்டப்பட்டு மியான்மரிற்கு அழைத்து வரப்பட்டனர். 5 பேரை திரட்டுபவர் இலவசமாக பயணிக்க முடியும் என சலுகை வழங்கப்பட்டிருந்தது.
இந்த பயணத்திற்காக திரட்டப்படுபவர்களுடன், பிரதான ஏற்பாட்டாளர்கள் என கூறப்பட்டவர்கள் தொலைபேசியில் பேசினர். நாடு திரும்பியவர்களின் தகவலின்படி, 4 பிரதான ஏற்பாட்டாளர்கள் தம்முடன் தொலைபேசியில் பேசியதாக தெரிவித்தனர். இந்தோனேசியாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரொமி, லாவேஸில் உள்ள இலங்கையரான வேலு பாய், கனடாவை சேர்ந்த சிங்கம், பிரித்தானியாவில் வசிக்கும் ரவி ஆகியோரே ஏற்பாட்டாளர்கள் என தம்முடன் பேசியதாக தெரிவித்தனர்.
இவர்கள் நான்கு பேர், வேறு பெயர்களையும் பாவித்து பேசி, தமது வலையமைப்பில் பலர் இருப்பதை போல காண்பித்து வந்தனர்.இந்த பயணத்திற்காக திரட்டப்பட்ட அனைவரிடமும் ஏற்பாட்டாளர்கள் சொன்ன ஒரே விடயம் இதுதான்.
“தம்பியவை ஒன்றுக்கும் பயப்பட தேவையில்லை. இன்டநசனல் தரத்திலான சுற்றுலா கப்பலில்தான் நீங்கள் போகப் போகிறீர்கள். 50 பேர் மட்டும்தான் ஏற்றப்படுவீர்கள். எல்லோருக்கும் தனித்தனி ரூம்கள். ஏறி அறையை பூட்டிவிட்டு படுத்தீர்கள் எனில், 10 நாளில் கனடா. தேவையான உணவு கப்பலில் ஏற்றிவிட்டோம். சம்பா, சவ்வு, குத்தரிசிகள் உள்ளன. பன்றி, கோழி இறைச்சிகள் ஃபிரிசரில் நிரப்பப்பட்டுள்ளது. மாமிசம் சாப்பிடாதவர்களிற்கு காலை உணவிற்கு அவல் ஏற்றப்பட்டுள்ளது. என்ஜோய் பண்ணிக்கொண்டு போய் சேருவீர்கள்“ என்பதே அவர்கள் சொன்ன கதை இந்தோனேசியாவில் வசித்த ரொமி மியான்மரிற்கு வந்து, படகை வழியனுப்பும் வரை தங்கி நின்றார். மேற்படி கதைகளை சிரிக்காமல் சொன்ன ஆசாமியும் அவர்தான்.
யங்கூனில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் 8ஆம் திகதி பின்னிரவு பேருந்துகளில் ஏற்றப்பட்டு, கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 2 மணித்தியால பயணத்தில் கடற்கரையை அடைந்துள்ளனர்.
ஆக 50 பேர்தான் பயணிப்போம் என நினைத்துக் கொண்டு சென்றவர்கள், அங்கு பெருங்கூட்டம் கூடியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இரண்டாவது அதிர்ச்சி- அவர்களிற்கு காத்திருந்தது சுற்றுலா கப்பல்ல. மிகப்பழையபொருட்களை ஏற்றும் கப்பல். அங்கு சென்ற பின்னர், பலர் கப்பலில் ஏற மறுப்பு தெரிவித்தனர்.
எனினும், கடற்கரையில் மியான்மர் கடற்படையினர் துப்பாக்கிகளை நீட்டியபடி நின்றதாக நாடு திரும்பியவர்கள் தெரிவித்துள்ளனர். கப்பலில் ஏற மறுத்தவர்களை மிரட்டி கப்பலில் ஏற்றினர். 15 நாளில் கனடா சென்றுவிடலாம் தானே என மனதை சமாதானப்படுத்திக் கொண்டு கப்பலில் ஏறினர்.
கப்பல் புறப்படுவதற்கு முன்னதாக மியான்மரில் தங்கியிருந்த போது, யாரும் தன்னை புகைப்படம் எடுக்கக்கூடாது என்பதில் ரொமி எச்சரிக்கையாக இருந்தார். எனினும், அங்கு சாவகாசமாக உட்கார்ந்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது ஒருவர் சூட்சுமமாக புகைப்படம் எடுத்தார்.
புகைப்படத்திலிருப்பவரே ரொமியென குறிப்பிட்டு, இலங்கை திரும்பிய அகதிகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் அவரது புகைப்படத்தை வழங்கியுள்ளனர். அந்த புகைப்படத்தை நாமும் வெளியிட்டுள்ளோம். கப்பலுக்குள் 13 சண்டியர்கள்!
303 பேருக்கும் 50 மூட்டை அரிசியும், 15 கிலோகிராம் உப்பும், 25 மீன் ரின்களுமே உணவாக ஏற்றப்பட்டது. உப்பில்லாத கஞ்சியை சிறிதுசிறிதாக குடித்து சமாளித்துள்ளனர்.
கப்பல் சிறியது. அதிக பயணிகள். அனைவரும் சரியாக உட்காரக்கூட இடமிருக்கவில்லை. ஒரு மாதம் உட்காரவும் இடமில்லாமல்தான் பயணித்தனர். எம்முடன் பேசிய ஒருவர், இலங்கையிலிருந்து புறப்பட்ட போது தனது பொதியில் 100 கிராம் சமபோசா பைக்கற் ஒன்று இருந்ததாகவும், 14 நாட்கள் அதை சிறிது சிறிதாக சாப்பிட்டதாகவும் தெரிவித்தார்.
கழிவுநீர் தேங்கும் சிறிய நீர் நிலையிலிருந்தே தண்ணீர் எடுக்கப்பட்டு கப்பலின் தண்ணிர் தாங்கியில் நிரப்பப்பட்டிருந்தது. அதை குடிப்பதற்கு முன்னர் மேலாடையில் 5 அல்லது 6 முறை வடிப்பதாகவும், அதன்பின்னரும் வாடை தீராது என ஒருவர் குறிப்பிட்டார். அதை நாக்கில் நனைத்து உயிர் வாழ்ந்ததாக தெரிவித்தார்.
கப்பல் புறப்படுவதற்கு முன்னதாக, மியான்மரில் வைத்து அகதிகளிடம் சவடால் விட்டுள்ளார் ரொமி. சன்சீ கப்பலையும் தாமே அனுப்பியதாக கூறியுள்ளார்.
கப்பலில் ஏறியதும், அனைவரது தொலைபேசிகளையும் வாங்கி வைத்து விட்டனர்.
இந்த கப்பல் பயணத்தில் சுமார் 13 பேர் முக்கிய பாத்திரம் வகித்தனர். கப்பலை செலுத்தியவர்கள் தவிர, சுமார் 5 பேர் கப்பலை கட்டுப்படுத்தினர். ஏற்பாட்டாளர்களின் உறவினர்கள் மற்றும் அதிகமானவர்களை பயணத்திற்கு அழைத்து வந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் அவர்கள் அந்த பாத்திரத்திற்கு நியமிக்கப்பட்டனர்.
அவர்கள் தான் அகதிகளுடன் தொடர்புபட்டனர். கப்பலை கட்டுப்படுத்தியவர்கள் கப்பலின் மேல் தளத்தில் இருந்து கொண்டனர். ஏனையவர்கள் கீழே. மேலேயிருந்தவர்கள் நன்றாக சமைத்து சாப்பிட்டபடியிருந்தனர்.
பிரதான கடத்தல்காரன் ரொமியென குறிப்பிட்டு, பொலிசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய புகைப்படம்
கப்பலில் இருந்தவர்களை கட்டுப்படுத்திய 5 பேரும் மிக மோசமாக நடந்து கொண்டுள்ளனர். கோப்பாய், மல்லாகம், பளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களே கப்பலில் இருந்தவர்களை கட்டுப்படுத்தினர். இந்த 5 பேரில் ஒருவரான தனது உறவினர் ஒருவரிடம், ஒரு கையடக்க தொலைபேசியையும், பிலிப்பைன்ஸ் சிம் கார்ட் ஒன்றையும் ரொமி வழங்கியிருந்தார். அதன்மூலம், இவர் ரொமியுடனும், குடும்பத்தினருடனும் பேசி வந்தார். மேலேயிருந்தவர்களும் பேசி வந்தனர். ரொமி பயணம் பற்றிய வழிகாட்டல்களை வழங்கி வந்தார்.
கப்பல் முதல் 10 நாள் பயணத்தில் தைவானிற்கு அருகாக வந்துள்ளது. எனினும், கப்பலை வழிநடத்திக் கொண்டிருந்த ரொமி தொலைபேசியில், பசுபிக் கடலில் சூறாவளி ஏற்படப் போகிறது , வந்த வழியே திரும்பி பயணியுங்கள் என வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் கப்பல் வந்த வழியே பயணித்தது.
10 நாட்கள் கப்பல் வந்த வழியே பயணித்தது. தென்சீன கடலில் பயணித்த போது, கப்பலில் சர்ச்சைகளும், குழப்பங்களும் ஏற்பட்டன.
கப்பல் சேதமடைந்து தண்ணீர் உட்புக தொடங்கிய பின்னரும், அங்கிருந்த தொலைபேசியில் உதவி தகவல் அனுப்பப்படவில்லை. மீன்பிடி ரோலர்கள் அந்த பகுதியால் வந்து சென்ற போது, அகதிகள் உள்ளே பதுங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கப்பல் நிலைமை மோசமான நிலையில், நவம்பர் 5ஆம் திகதியளவில், ரொனியின் உறவினரான இளைஞன் அந்த கையடக்க தொலைபேசியில் ரொமியுடன் பேசிக் கொண்டிருந்த போது, தொலைபேசியை தருமாறு கப்பலில் இருந்த இளைஞர்கள் சிலர் கேட்டுள்ளனர். அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து தொலைபேசியுடன் ஓடிச்சென்றுள்ளார். கப்பல் பயணிகள் அவரை விரட்டிச் சென்றனர். ரொமியின் உறவினரான இளைஞன் தொலைபேசியை குத்தி உடைத்து கடலில் வீச முயன்றுள்ளார். அதற்குள் அவரை மடக்கிப் பிடித்து, தொலைபேசியை பறித்து அதிலிருந்த சிம் கார்டை பயணிகள் எடுத்துக் கொண்டனர்.
தொலைபேசியை குத்தி உடைத்தவரை இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நையப்புடைத்தனர்.
அவர் ஏன் தொலைபேசியை உடைத்தார், தொலைபேசியில் மோசடி விவகாரம் பேசப்பட்டதா அல்லது கப்பலில் இருந்தவர்கள் உதவிகோரி தப்பிச் சென்றுவிடக்கூடாது என நினைத்தார்களா என பல கேள்விகள் உள்ளன.
கப்பலில் பயணித்த இளைஞன் ஒருவர் தனது தொலைபேசியை வழங்காமல் ஒளித்து வைத்திருந்தார். அந்த தொலைபேசியில், பிலிப்பைன்ஸ் சிம் கார்ட் இணைக்கப்பட்டே, கப்பலில் இருந்து உதவிகோரப்பட்டுள்ளது.
பின்னர், நவம்பர் 7ஆம் திகதி, ஜப்பானியக் கப்பலான ஹீலியோஸ் லீடர் கப்பலில் அகதிகள் ஏற்றப்பட்டு, வியட்நாமிற்கு அகதிகள் கொண்டு வரப்பட்டது அனைவரும் அறிந்ததே.
இதற்குள், தைவானிற்கு அருகிலிருந்த கப்பல் 10 நாள் திரும்பி பயணித்தது பற்றி, கப்பலில் இருந்தவர்களிடம் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. வியட்நாமில் தங்கியிருந்த 60 பேரை கப்பலில் ஏற்றிச்செல்லவே திரும்பி வந்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.
கப்பல் பயணம் தோல்வியடைந்தது, பெருந்தொகை பணம் இழந்தது, கப்பல் பழுதடைந்த பின்னரும் உதவி கோராமல் அனைவரையும் மரண ஆபத்தை ஏற்படுத்த முனைந்தது என, கப்பலில் பயணிகளை கட்டுப்படுத்திய 5 பேர் மீதும் பயணிகளின் கோபம் திரும்பியது.
வியட்நாம் இராணுவத்தினரால், முன்னர் கொரோனா தொற்றாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடடொன்றில் கப்பல் அகதிகளை தங்க வைத்தனர். அங்கு வைத்து தினமும், அந்த 5 பேரும் சக பயணிகளால் தாக்கப்பட்டுள்ளனர். அனேகமாக இரவு வேளைகளில் அடி விழும்.
வடிவேலுவின் நகைச்சுவையில் ஒரு குழு பொழுதுபோக்காக அடித்து விட்டு, மற்றொரு குழுவிடம் அடிப்பதற்காக அனுப்பி வைப்பதை போன்ற சம்பவங்களே அந்த 5 பேருக்கும் நிகழ்ந்தது. அடி அகோரமோ என்னவோ, 5 பேரில் 4 பேர் நேற்று இலங்கை வந்து விட்டனர். விமானத்தில் புறப்படுவதற்கு முன்னரும், அங்கு தங்கியிருப்பவர்கள் கோபம் தீர ஒரு சுற்று அடி போட்டு விட்டே அனுப்பி வைத்துள்ளனர்.
இலங்கை திரும்பியதும், அந்த 4 பேர் மீதும் விசேட விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் சில நேரங்களில் மேலதிக விசாரணைகளை சந்திக்கலாம். வியட்நாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இரண்டு அகதிகள், இலங்கைக்கு அனுப்ப வேண்டாமென குறிப்பிட்டு கழிவறையை சுத்தம் செய்யும் திராவகத்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்கள், அதில் ஒருவர் உயிரிழந்தார் என முன்னர் செய்தி வெளியாகியிருந்தது. எனினும், அது தொடர்பில் தற்போது வேறு விதமான தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு அனுப்ப வேண்டாமென குறிப்பிட்டு அவர் தற்கொலை செய்ததாக தகவல் வெளியானது, அகதிகள் தொடர்பான சர்வதேச பார்வையை மாற்ற உதவும் என யாரும் நினைத்திருக்கலாம்.
மறுவளமாக, உள்ளூரில் அவரது முடிவு விமர்சிக்கப்பட்டிருந்தது. 4 பிள்ளைகளின் தந்தை பொறுப்பற்ற முடிவு எடுத்ததாக பரவலான விமர்சனமிருந்தது. எனினும், அந்த விமர்சனம் தவறானது என வியட்நாமிலிருந்து திரும்பியவர்கள் கூறுகிறார்கள்.
நாடு திரும்பியவர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி,
வியட்நாமில் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தது, முன்னர் கொரோனா தொற்றாளர்கள் தங்கியிருந்த இடம் ஒன்று. அதனாலோ என்னவோ, அகதிகள் ஒவ்வொருவரிற்கும் 1 லீற்றர் அளவுள்ள சானிட்டைசர் வழங்கப்பட்டிருந்தது.
வீடு, காணி, தொழில் நிலையங்களை விற்று கப்பல் ஏறியவர்கள், மோசமாக ஏமாற்றப்பட்ட பெருந் துயரத்தை அனுபவித்தனர். பலர் இரவில் தூக்கம் வராமல் துயரத்தில் தவித்துள்ளனர். இந்த பெரும் வேதனையை மறந்து நிம்மதியாக உறங்குவதற்காகவே அவர்கள் சானிட்டைசர் பருகியுள்ளனர் என்கிறார்கள் வியட்நாமிலிருந்து வந்தவர்கள்.
ஒருவர் சானிட்டைசரில் தண்ணீர் கலந்து பருகினார். மற்றையவர் சானிட்டைசரை சிறிது சிறிதாக பருகியுள்ளார். காலையில் அச்சத்துடன் காணப்பட்டவர், சிறிது நேரத்தின் பின் கருப்பு நிறமாக வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக வைத்தியசாலைக்கு இருவரும் அனுப்பப்பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றையவர் தப்பித்தார். தண்ணீர் கலந்து பருகியவரும் தற்போது யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். இதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து ஆக்களை சேர்த்தவர்களில் பிரதானமானவர்களில் ஒருவர் யாழ் மருதனாமடம் ஆஞ்சனேயர் கோவிலுக்கு முன் உள்ள சிறிமுதல்வன் ஸ்ரோர் முதலாளியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பலரையும் கனடாவுக்கு கப்பலில் அனுப்பி தனது மகனை இலவசமாக கொண்டு செல்ல முயன்றதாகத் தெரியவருகின்றது.