2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட 17.5 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (13) விசேட குற்றப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளது.
இதனடிப்படையில், இதுவரை பணம் தொடர்பில் வாக்குமூலங்கள் பெறப்படவில்லை என சட்டத்தரணிகள் வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலங்களைப் பெறுமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.
ஜனாதிபதி சட்டத்தரணி றியென்சி அர்சகுலரத்ன, சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ஆகியோர் இதனைக் குறிப்பிட்ட போது, விசாரணைகளை நடத்துவதற்கு நீதிமன்ற உத்தரவு தேவையில்லை என நீதவான் தெரிவித்தார்.
வாக்குமூலங்களை வழங்குவதற்காக கைது உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் நீதவான் தெரிவித்துள்ளார்.
செயற்பாட்டாளர்கள் பணத்தை அன்றைய தினமே பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து பொலிஸார் இது தொடர்பில் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.