கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் 16 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கங்களுடன் இந்தியாவுக்கு தங்கம் கடத்தலில் ஈடுபட்ட ஐவர் நேற்று (10) இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்தியாவின் மும்பைக்கு செல்லவிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இந்திய பிரஜை ஒருவரும் உள்ளடங்குகின்றார்.
இதன்போது தங்களுடைய பயணப் பொதிகளில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கங்கள் கட்டுப்பாட்டு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களிடமிருந்து 10.5 கிலோ தங்கத் தகடுகள், ஜெல் வடிவில் உள்ள தங்கம் மற்றும் தங்க ஆபரணங்கள் சுங்க பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 160 மில்லியன் ரூபாய் எனவும் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.