“உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அப்போது என்ன நடக்கிறது என்பதே மூளையில் பதிவாகவில்லை ” என்று பிபிசியிடம் ருடால்ப் எராஸ்மஸ் தெரிவித்தார்.
“அது ஒரு அதிர்ச்சியான தருணம்” என்று மேலும் கூறிய அவர், ஆரம்பத்தில் தனது முதுகில் குளிர்ச்சியாக இருந்தபோது, தண்ணீர் பாட்டில் என்று நினைத்ததாக குறிப்பிட்டார்.
“அந்த குளிர்ச்சியான உணர்வை நான் உணர்ந்தேன். என் சட்டையின் மேல் அது ஊர்ந்து சென்றது ” என்று அவர் நம்மிடம் கூறினார். பாட்டிலை சரியாக மூடாததால் அதில் இருந்து தண்ணீர் வடிந்திருக்கலாம் என்று அவர் முதலில் நினைத்திருந்தார்.
“நான் இடது பக்கம் திரும்பி கீழே பார்த்தபோது நாகப்பாம்பு இருக்கைக்கு அடியில் தலையை பின்னோக்கி சாய்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன் ”
பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், ப்ளூம்ஃபோன்டைனில் இருந்து பிரிட்டோரியா நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். பீச்கிராப்ட் பேரோன் 58 என்ற அந்த தனியார் விமானத்தில் 4 பயணிகளுடன் பயணியாக பாம்பும் பயணம் செய்துள்ளது.
கேப் கோப்ரா வகை பாம்புகள் கடித்தால் 30 நிமிடங்களில் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்திவிட முடியும். எனவே, யாருக்கும் பீதியை ஏற்படுத்த வேண்டாம் என்பதற்காக,விமானத்தில் பாம்பு இருப்பது தொடர்பாக மற்ற பயணிகளிடம் கூறுவதற்கு முன்பாக மிகவும் யோசித்ததாக அவர் தெரிவித்தார்.