நேற்று (6) பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 6 கிராமுக்கு அதிகமான ஹெரோயினுடன் கட்டான, தாகொன்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் வன்முறையில் ஈடுபட்டதுடன், கைது செய்யப்பட்ட போது பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கியுள்ளார். எனினும் பொலிஸார் சந்தேக நபரை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரால் தாக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உயிருள்ள கைக்குண்டு ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.அவர் 39 வயதான டகோன்ன பிரதேசத்தில் வசிக்கும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (7) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கட்டானையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 45 கிராமுக்கு அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் 28 வயதுடைய நபரொருவரை கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கட்டுவெல்லேகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும், இன்று (7) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.5 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் மற்றுமொரு சந்தேகநபர் அங்குலான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் அங்குலான பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.நான்காவது சந்தேக நபரான 33 வயதுடையவர் 6 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கல்கிசை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்தவர்.