கோல்டன் குளோப் விருதுக்கு 2 பிரிவுகளில் தேர்வான இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம். அடுத்ததாக அமெரிக்காவின் புகழ் மிக்க Critics Choice விருதுக்கு 5 பிரிவுகளின் கீழ் அசத்தலாக தேர்வாகி உள்ளது. இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் இந்திய ரசிகர்களை மட்டுமின்றி சர்வதேச ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஹாலிவுட்டில் இந்த ஆண்டு ஏகப்பட்ட சர்வதேச விருதுகளை தட்டித் தூக்கும் குறிக்கோளுடன் பல விருது விழாக்களில் படத்தை களமிறக்கி உள்ளார் இயக்குநர் ராஜமெளலி. சீதாராமராஜுலு மற்றும் கொமரம் பீம் என இரு சுதந்திர போராட்ட வீரர்களின் வீரக் கதையை புனைவுக் கதையாக சற்றே மாற்றி இயக்குநர் ராஜமெளலி இயக்கிய படம் தான் ஆர்ஆர்ஆர். ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவருமே இந்த படத்திற்காக உயிரை கொடுத்து நடித்துள்ளனர் என்று சொன்னால் அது மிகையாகாது. மேலும், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஸ்ரேயா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளனர். ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்திய வீரர்கள் போராடிய கதை தான் இந்த படம். சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் எல்லாம் கோல்டன் குளோப், ஆஸ்கர் விருதுகளுக்கு போட்டி போட்டாலும், நாமினேஷனுக்கு தேர்வாகவில்லை. ஆனால், ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு 2 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. சிறந்த வெளிநாட்டு திரைப்படம் மற்றும் சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் உள்ளிட்ட பிரிவுகளில் தேர்வானது.
கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்ஆர்ஆர் தேர்வான நிலையில், அடுத்ததாக அமெரிக்காவின் புகழ் மிக்க கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுக்கு 5 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த வெளிநாட்டு திரைப்படம் மற்றும் சிறந்த பாடல் (நாட்டுக் கூத்து) உள்ளிட்ட 5 பிரிவுகளில் தேர்வாகி உள்ள இந்த படம் எத்தனை விருதுகளை வெல்லும் என்கிற எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. அமெரிக்காவின் 600 பிரபல மீடியா விமர்சகர்கள் படங்களை பார்த்து தேர்வு செய்யும் விருது விழா தான் கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருது. உலகளவில் ஏகப்பட்ட படங்கள் இதற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவற்றை எல்லாம் கடந்து இப்படியொரு இமாலய சாதனை தூரத்திற்கு வந்துள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் இந்த ஆண்டு விருதையும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோல்டன் குளோப், கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகளை தொடர்ந்து ஆஸ்கர் போட்டியிலும் பங்கேற்றுள்ளது ஆர்ஆர்ஆர். விரைவில் ஆஸ்கர் நாமினேஷன் அறிவிப்புகள் வெளியாக உள்ள நிலையில், அதிலும், பல பிரிவுகளின் கீழ் ஆர்ஆர்ஆர் தேர்வாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் ராஜமெளலி இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு சென்றது பெருமைக்குரிய விஷயம் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.