ஹவாய் காட்டு தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மவுய் தீவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பயங்கர காட்டு தீ ஏற்பட்டது. இதன் காரணமாக லஹய்னா என்ற நகரில் குடியிருப்பு பகுதிகளில் தீ பரவியதில்,2,200 கட்டிடங்கள் சேதமடைந்தன. தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். எனினும் தீயில் சிக்கி பலர் பலியாகி உள்ளனர்.
மவுய் போலீஸ் அதிகாரி ஜான் பெலெட்டியர் கூறுகையில்,‘‘ இதுவரை 93 பேரின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது’’ என்றார். மாகாண ஆளுனர் ஜோஸ் கிரீன் கூறும்போது,‘‘ஹவாய் மாகாணத்தில் இதுபோன்ற தீ விபத்தை இதுவரை பார்த்ததே இல்லை. தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு, மருத்துவ வசதிகள் அளிப்பதற்கு இப்போது முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்’’ என்றார்.