அரியலூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவை மிகக் கடுமையாகச் சாடி பேசினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடி பிடிக்கத் தொடங்கிவிட்டது.. இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்றே அக்கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்தச் சூழலில் அரியலூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவை மிகக் கடுமையாகச் சாடி பேசினார்.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார். அவர் பேசுகையில், “பல ஆண்டுகளாகத் தொடர்ந்து காவேரி பிரச்சினைக்குத் தீர்வு கண்ட ஒரே அரசு அதிமுக அரசு தான். அதேபோல ஓரே ஆண்டில் தமிழ்நாட்டிற்கு 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை இங்கே கொண்டு வந்துள்ளோம். இதுபோல நாம் கொண்டு வந்த பல திட்டங்களுக்கு ஸ்டாலின் இப்போது திறந்து வைத்து வருகிறார்.
இது மட்டுமில்லாமல், ஏழு சட்டக் கல்லூரியையும் கொண்டு வந்துள்ளதும். நமது நாட்டிலேயே தமிழ்நாடு தான் உயர் கல்வியில் டாப் இடத்தில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிமுக தான். திமுக எதாவது ஒரு திட்டத்தையாவது உருப்படியாகக் கொண்டு வந்துள்ளனரா.. நாம் முதல்வராக இருந்த போது கொண்டு வரப்பட்ட முதியோர் உதவித் தொகை திட்டத்தில் பலரும் பயன்பெற்றனர். ஆனால், அதையும் கூட திமுக ஆட்சியில் பலருக்கும் நிறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல திருமண உதவித் தொகை திட்டத்திலும் நகையைக் கொடுப்பதில்லை.
திமுகவில் கட்சிக்காக வேலை செய்பவர்களுக்கு எல்லாம் மரியாதை இல்லை. அதிமுகவில் சாதாரண தொண்டாக இருந்த நான்.. உங்களால் முதல்வராக இருந்தேன்.. தலைமை பொறுப்புக்கும் இப்போது வந்துள்ளேன். ஆனால், திமுகவில் அப்படியில்லை. கட்சிக்காக உழைத்தவர்களை விட்டுவிட்டு உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளனர். கருணாநிதி பேரன், ஸ்டாலினின் மகன் என்பது மட்டுமே உதயநிதியின் அடையாளம். ஸ்டாலின் தனது மகன் உதயநிதிக்கு முடிசூட்டு விழாவை நடத்தியுள்ளார் என்றே சொல்லலாம்.
பொங்கலுக்கு அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,500 மற்றும் 21 பொருட்களைத் தந்தோம். ஆனால், திமுக ஆட்சியில் கொடுக்கப்படும் பொருட்கள் தரமற்றதாக இருக்கிறது. இது மட்டுமா.. அனைத்து கட்டணத்தையும் திமுக தொடர்ந்து உயர்த்தியே வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் தடை இல்லாத மின்சாரம் அளித்தோம். ஆனால், இவர்கள் ஆட்சியில் மின் கட்டணத்தையும் உயர்த்திவிட்டார்கள். மின் தடையும் ஏற்படத் தொடங்கிவிட்டது. இதுதான் இவர்கள் சொல்லும் திராவிட மாடல் ஆட்சியா..
திமுக ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் அவர்கள் தேர்தல் சமயத்தில் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவதாகச் சொன்னார்கள். அதையும் செய்யவில்லை. பிரசாரம் சமயத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய தங்களுக்குத் தெரியும் என்றெல்லாம் உதயநிதி கூறினார். இப்போது வரை நீட் தேர்வு இருந்து கொண்டே தான் இருக்கிறது. திமுக ஆட்சி அமைந்த பிறகு 15 உயிர்கள் நீட் தேர்வால் பறிபோகியுள்ளது. இதற்கெல்லாம் அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்.
அதிமுக காலத்தில் கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடு விழா நடத்தி வருகிறார்கள். சட்ட ஒழுங்கும் இங்கே மிக மோசமாக உள்ளது. கஞ்சா விற்காத இடமே இல்லை என்ற சூழலே இப்போது தமிழ்நாட்டில் உருவாகி உள்ளது.. போதை அதிகம் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு உருவாகியுள்ளது. அடுத்து மீண்டும் அதிமுக அரசு அமையும் போது, இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் மீது இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டுமான பொருட்கள் தொடங்கி அனைத்து பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தேர்தல் காலத்தில் ஒரு பேச்சு.. தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சு என்பதே அதிமுகவின் நிலைப்பாடாக இருக்கிறது. சிலிண்டருக்கு மாதம் நூறு ரூபாய் மானியமாகத் தருவதாகச் சொன்னார்களே.. அது என்ன ஆனது. இப்படி நிறைவேற்றாமல் விட்ட பல வாக்குறுதிகளைச் சொல்லாம்.. இதற்குப் பெயர் தான் திராவிட மாடல் ஆட்சியா!” என்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.