மதுரையைச் சேர்ந்த சமூக வலைத்தள பிரபலம், ராம். மும்பை வந்திருந்த இவர், ஜூகுவில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்குச் சொந்தமான ‘ஒன் 8’ என்ற ஹோட்டலில் உணவருந்த சென்றிருந்தார். தமிழக பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் சென்ற ராமை, தடுத்து நிறுத்திய ஹோட்டல் காவலாளிகள், உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர்.
இதுகுறித்து ராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது: இதுதான் விராட்கோலி சாரோட ‘ஒன்8’ ஓட்டல். இவ்வளவு தூரம் வந்ததுக்கு இப்படி ஒன்று நடந்தது ரொம்பவே மனதுக்கு கஷ்டமாகி விட்டது. பெரும்பாலானோர் விராட்கோலியின் பெயருக்காகதான் இங்கு வருகின்றனர்.
புதிய வேஷ்டி சட்டைதான் போட்டிருக்கிறேன். ஆனால் பசியோட வந்த என்னை டிரஸ்கோட் சரியில்லைனு அனுமதி மறுத்துட்டாங்க. இந்த மாதிரி டிரஸ்கோட்காக அனுமதி மறுப்பது இனி நடக்காமல் இருக்கணும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவலாகி வருகிறது.