கேப்டவுன், மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கேப்டவுனில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஸ்டபானி டெய்லர், ஷெமைன் காம்பெல்லே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தனர். ஸ்டபானி 42 ரன்களும், ஷெமைன் காம்பெல்லே 30 ரன்களும் சேர்த்தனர். செடீன் நேசன் 21 ரன்களும் (நாட் அவுட்), ஷபீகா 15 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பூஜா வஸ்த்ராகர், ரேணுகா சிங் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் ஷபாலி வர்மா மற்றும் மந்தனா ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் மந்தனா 10 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரோட்ரியாஸ் 1 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து ஷபாலி வர்மா 28 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருடன், ரிச்சா கோஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்த ஜோடியில் ஹர்மன்பிரீத் கவுர் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் ரிச்சா கோஸ் 44 (32) ரன்களும், தேவகி வைத்யா ரன் எதுவும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 18.1 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்ட்டீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக கரிஸ்மா ராமாராக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.