விநாயகர் சதுர்த்தி நெருங்குவதால் பழநியில் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.நாடு முழுவதும் வரும் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படும். பின், நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
விநாயகர் சதுர்த்திக்கு 7 நாட்களே உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி ஆங்காங்கே தீவிரமடைந்துள்ளது. பழநியில் வின்ச் நிலையம் அருகிலும், அருள்ஜோதி வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த மூர்த்தி கூறுகையில், ‘விநாயர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். பிளாஸ் ஆப் பாரீஸ் எனும் மாவுப்பொருளால் சுற்றுச்சூழலுக்கு மாசுபாடு இல்லாத வகையில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
ரூ.500ல் துவங்கி ரூ.15 ஆயிரம் வரையிலான விலையில் பல அடி உயரத்திற்கு சிலைகள் தயார் செய்து தரப்படும். இதற்காக கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியில் இருந்து 15 பேர் கொண்ட குழு வந்துள்ளோம்.
பல ஊர்களுக்கு சென்று, அங்கேயே தங்கி இருந்து சிலைகளை செய்து வருகிறோம். பைக் விநாயகர், புல்லட் விநாயகர், ராக்கெட் விநாயகர், எலி விநாயகர், மான் விநாயகர், சந்திரயான் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரித்து வழங்குகிறோம்’ என்றார்.