நடிகர் விஜய் எப்போதுமே ரசிகர்களை தன்னுடைய படங்கள் மூலம் என்டர்டெயின் செய்ய தவறியதில்லை. அவரது படங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் சேர்த்து கொடுத்து தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறார். பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை என்ற போதிலும் வசூல்மழையை பொழிந்தது. இந்நிலையில் தற்போது தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்தப் படம் இன்னும் சில தினங்களில் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளது.
வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. இந்தப் படத்தின் இசை வெளியீடு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் அடுத்ததாக நாளைய தினம் படத்தின் ட்ரெயிலரும் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு தற்போது அப்டேட் வெளியிட்டுள்ளது. படத்தில் சரத்குமார், ராதிகா, குஷ்பூ, ஷாம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே விஜய்யுடன் இணைந்துள்ளது. பேமிலி சென்டிமெண்டை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக விஜய்யின் வாய்சில் வெளியாகியுள்ள ரஞ்சிதமே பாடல் அதிகமான வியூஸ் மற்றும் லைக்சை தட்டித் தூக்கியுள்ளது. குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள போதிலும் படத்தில் விஜய் படங்களுக்கே உரிய காமெடி, ஆக்ஷன் உள்ளிட்டவையும் தூக்கலாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விஜய்யின் முந்தைய படங்களை பீட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாரிசு படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தற்போது படத்தின் சென்சார் முடிக்கப்பட்டு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. அஜித்தின் துணிவு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் விஜய் படத்திற்கு தற்போது யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் படத்தின் ரன்டைமும் அறிவிக்கப்பட்டுள்ளது. படம் 2 மணிநேரம் 49 நிமிடங்கள் ஓடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சான்றிதழ், ரன்டைம் மற்றும் ட்ரெயிலர் குறித்த அப்டேட்கள் விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இந்தப் படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுவதற்கு காரணம், படம் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அஜித் படத்துடன் மோதவுள்ளது. அஜித்தின் துணிவு படம் மற்றும் விஜய்யின் வாரிசு படம் இரண்டும் பொங்கலையொட்டி அடுத்தடுத்த நாட்களில் ரிலீசாக உள்ள நிலையில், இரண்டு படங்களில் எந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று தற்போதே பட்டிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது.
வாரிசு படத்தின் ரிலீஸ் குறித்த சந்தோஷத்தில் ரசிகர்கள் இருந்தாலும் ஒருபுறம் தளபதி 67 படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது அவர்களை வெகுவாக உற்சாகப்படுத்தியுள்ளது. இத்நப் படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீசாக உள்ளதாக கூறப்படும் நிலையில், அது சாத்தியமானால், இந்த ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த ஆண்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.