வாகனங்கள் மீதான இறக்குமதி தடையை நீக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என பதில் அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் இலங்கைக்கு சில நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று போலியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜேர்மன் விஜயம் நிறைவடைந்தவுடன், இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான செயற்குழு இணக்கப்பாட்டினை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.
இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைத் தலைமைத்துவம் வகிக்கும் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் இலங்கைக்கு சில நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று போலியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் பலவும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் முன்னேற்றகரமான பேச்சுவார்த்தையில் தொடர்ச்சியாக பங்களிப்புச் செய்து வருகின்றன.
அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்திற்கு முன்பாக நாட்டின் பல்வேறு பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி தடை நீக்கப்படும்.அதேநேரம் பொதுப்போக்குவர்துக்கான வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடு அவசியம் என்றும் மற்றைய வாகனங்கள் மீதான இறக்குமதி தடையை நீக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும் பதில் அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.