வவுனியா,வெளிக்குளம் பகுதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் உத்தியோகபூர்வ டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளானதில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
7 அதிகாரிகளுடன் வவுனியா மடுகந்த விசேட அதிரடிப்படை முகாமுக்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் முகாமிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.வெளிக்குளம் பகுதியில் ஹொரவ்பொத்தானை வீதியில் 2 கிலோமீற்றர் கம்புவிற்கு அருகில் வீதியில் சென்ற டிஃபென்டர் வாகனம் மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டிரைவரால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் சாலையை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
காயமடைந்த 7 விசேட அதிரடிப்படை அதிகாரிகளில் இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 29 மற்றும் 31 வயதுடைய குருநாகல் மற்றும் மதவாச்சி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. STF அதிகாரிகள் இருவரின் சடலங்களும் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்தில் காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர், இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள், பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் கான்ஸ்டபிள் சாரதி ஆகியோர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.