ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமானவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில் வருங்கால கணவரை அசாம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள நாகோன் மாவட்ட போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவபர் ஜூன்மோனி ரபா. இவருக்கும் ராணா போகாக் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறிய நிலையில் ராணா போகாக் மற்றும் ஜூன்மோனி ரபா ஆகியோருக்கும் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் திருமண நிச்சயத்தார்த்தம் நடந்தது. இவர்கள் 2 பேரின் திருமணம் இந்த ஆண்டு நவம்பரில் நடைபெற உள்ளது.
இதையடுத்து இவர்கள் 2 பேரும் செல்போனில் பேசினர். ராணா போகாக் நடத்தையில் அவருக்கு சந்தேகம் எழுந்தது. இதுபற்றி ஜூன்மோனி ரபா விசாரிக்க துவங்கினார். அப்போது அவர் ஒஎன்ஜிசி நிறுவனத்தில் வேலை செய்வதாக போலியாக தெரிவித்தது தெரியவந்தது.
மேலும் ஓஎன்ஜிசி நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றுவதாக கூறி வேலை வாங்கி தருவதாக உறுதியளித்து ஏராளமானவர்களிடம் பணம் வசூலித்துள்ளார்.
இவ்வாறாக அவர் பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக 3 பேர் ஜூன்மோனி ரபாவிடம் கூறினர். இதையடுத்து ராணா போகாக் மீது ஜூன்மோனி ரபா வழக்குப்பதிவு செய்தார். தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தார்.
இந்நிலையில் இன்று ராணா போகாக்கை, ஜூன்மோனி ரபா கைது செய்தார். இவரிடம் இருந்து போலியான முத்திரைகள் உள்ளிட்ட சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுபற்றி ஜூன்மோனி ரபா கூறுகையில், ‛‛எனக்கு சந்தேகம் வந்த நிலையில் சில முக்கிய தகவல்களை மூன்று பேர் அளித்தனர். இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன்” என்றார்.தனக்கு நிச்சயிக்கப்பட்ட ராணா போகாக்கை கைது செய்துள்ள ஜூன்மோனி ரபா நேர்மையான போலீஸ் அதிகாரியாக பெயர் பெற்றவர்.
கடந்த ஜனவரி மாதம் இவர் செய்தித்தாள்களில் தலைப்பு செய்தியாக வந்திருந்தார். அதாவது பிரம்மபுத்திரா ஆற்றில் சட்டவிரோதமாக படகு இயக்கிய வழக்கு விசாரணையில் இருந்து விலகும்படி பிபுரியா தொகுதி எம்எல்ஏ அமியா குமார் புயான் கூறியதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பான ஓடியோ அப்போது வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.