முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதி மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்லும் பாதைப் பிரச்சினைக்கு விரைவில் முடிவு எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (16.02.2023) முல்லைத்தீவு மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட்டுவாகல் பகுதியில் மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டபோதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, காணி விடுவிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் மற்றும் ஜனாதிபதி தலைமையிலான உயர்மட்ட கூட்டத்தில் இது குறித்து கோரிக்கை விடுத்தபோது, பாதையை நேரில் சென்று பார்த்துத் தீர்த்துவைக்குமாறு ஜனாதிபதி என்னிடம் பணிப்புரை விடுத்தார்.
பாதையை திறந்து விடுமாறு கோரிக்கை இன்று வந்து சம்மந்தப்பட்டவர்களுடன் கதைத்துள்ளேன் விரைவில் அதற்கான முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
வட்டுவாகல் பகுதி மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்லும் பாதையில் படையினரின் முகாம் அமைந்துள்ளதால் அந்த பாதையினை திறந்து விடுமாறு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், குறித்த வீதியின் பகுதிக்கு இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்றுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சிடம் கலந்துரையாடல் இதன்போது முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள், மீனவர்களுடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.திலீபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காணி வரைப்படம் ஊடாக 59ஆவது படைப்பிரிவினை சேர்ந்த இராணுவ அதிகாரிக்கு அரச அதிகாரிகளால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது, இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளனர்.
“இதுவரை தங்களை இராணுவம் வீதியால் செல்லவோ இராணுவ காணியில் உள்ள ஆலய வழிபாட்டிற்கு விடவோ இல்லை” என மீனவர்கள் அமைச்சரிடம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.