கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் அத்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட ஆகியோர் அப்பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.
ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு தனக்கு ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அறிவித்ததாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் (04-05-2023) தனக்கு அந்த அறிவிப்பு வழங்கப்பட்டதாகவும் தொலைபேசி ஊடாக அது அறிவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
அவ்வாறான நிலையில் அத்மிரால் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொடவுக்கும், வட மேல் மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு அரசாங்கத்தின் உயர் மட்டம் அறிவித்துள்ளது.
கடந்த நாட்களில் வசந்த கரன்னாகொட தொடர்பில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் தொடர்ச்சியாக பேசப்பட்டுள்ளது. அவர் மாகாண சபையை இராணுவ ஆட்சியாக மாற்றுவதாக இதன்போது பேசப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இந்த அறிவிப்பு அவருக்கும் விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. வசந்த கரன்னாகொடவுக்கு அமரிக்கா விதித்துள்ள தடையும் இதன் பின்னணியில் இருப்பதாக நம்பப்படுகின்றது.
இந்நிலையில், அனுராதா யஹம்பத் இராஜினாமா செய்தால், கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை நியமிக்க அரசாங்க உயர் மட்டம் பேசி வருவதாக அறிய முடிகின்றது.