டாக்கா, மியான்மரில் நடந்த இனப்படுகொலையின் காரணமாக பல்லாயிரணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். அவர்கள் அனைவரும் வங்காளதேசத்தின் தென்கிழக்கில் இருக்கும் காக்ஸ் பஜார் நகரில் உள்ள மிகப்பெரிய முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இது உலகின் மிகப்பெரிய அகதிகள் முகமாக விளங்குகிறது.
இந்த நிலையில் இந்த அகதிகள் முகாமில் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் மதியம் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்ட எரிந்த கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்கு பரவியது. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். இங்குள்ள வீடுகள் அனைத்தும் மூங்கில் மற்றும் தார்ப்பாய்களை கொண்டு செய்யப்பட்ட வீடுகள் என்பதால் சில நிமிடங்களிலேயே எரிந்து சாம்பலாகின. இந்த கோர தீ விபத்தில் முகாமில் இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகின. எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் தீ விபத்தில் வீடுகளை இழந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திறந்த வெளிகளில் தங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.