லிட்ரோ எரிவாயுவின் விலையில் இன்றைய தினம் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக எரிவாயுவின் விலை அதிகரிக்கலாம் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலார் சந்திப்பு இன்று முற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் எடைகொண்ட வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 500 ரூபா அளவில் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகின்றது.
கடந்த ஜனவரி 5 ஆம் தேதி இறுதியாக எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. இதன்போது 12.5 கிலோகிராம் எடைகொண்ட வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 201 ரூபாவால் குறைக்கப்பட்டது. இதன்படி குறித்த எரிவாயு கொள்கலன் 4 ஆயிரத்து 409 ரூபாவாக தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
5 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டு ஆயிரத்து 770 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.