லடாக்கில் இதுவரை இல்லாத அளவுக்கு சீனாவின் அத்துமீறல்களும், தாக்குதலும் இனிதான் நடைபெறப் போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பல்வேறு உளவுத் தகவல்களின் அடிப்படையிலும், நேரடி கள ஆய்வு மேற்கொண்டதன் பேரில் லடாக் போலீசார் இந்த அறிக்கையை தயாரித்து, அண்மையில் நடைபெற்ற காவல்துறை உயரதிகாரிகள் மாநாட்டில் பிரதமரிடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக் மீது பல ஆண்டுகளாக கண் வைத்துள்ள சீனா, அங்கு வரலாறு காணாத ஆயுதம் மற்றும் படைக்குவிப்பிலும் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடான சீனா இந்தியாவுக்கு கடந்த 10 ஆண்டுகளாக கொடுத்து வரும் குடைச்சல் கொஞ்சம் நஞ்சமல்ல. நாடு பிடிக்கும் ஆசையை இன்னும் கைவிடாத சீனா, தன்னை சுற்றியிருக்கும் சிறிய நாடுகளான பூடான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளை மிரட்டுவது போல இந்தியாவையும் சீண்டிப் பார்க்க தொடங்கியிருக்கிறது. அந்த வகையில், லடாக்குக்குள் கடந்த 2020-ம் ஆண்டு சீனப்படையினர் அத்துமீறி நுழைந்து, பின்னர் இந்திய ராணுவத்தினரால் துரத்தியடிக்கப்பட்டனர்.
ஆனால், அதன் பிறகும் தமது முயற்சியைக் கைவிடாத சீனா, கடந்த மாதம் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்குள் மீண்டும் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த இந்திய ராணுவத்தினரை சரமாரியாக தாக்கினர். இதில் சுதாரித்துக்கொண்டு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில், தங்கள் நாட்டு எல்லைக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர் சீன ராணுவத்தினர். இந்த இரு நிகழ்வுகளும் சீனாவுக்கு சர்வதேச அரங்கில் பெரிய சறுக்கலை ஏற்படுத்தியது. இதற்கு பழிவாங்க துடிக்கும் சீனா, லடாக் மற்றும் அருணாச்சல் எல்லையில் படைகளை குவித்து வருகிறது.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக லடாக்கிலும், அருணாச்சல பிரதேசத்திலும் லட்சக்கணக்கான வீரர்கள் மற்றும் அதிநவீன ராணுவத் தளவாடங்களை இந்தியாவும் குவித்துள்ளது. இதனால் இந்தியா – சீனா இடையே எந்நேரமும் போர் வெடிக்கலாம் என்ற சூழல்தான் வடகிழக்கு பிராந்தியத்தில் நிலவி வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியிடம் லடாக் மாநில போலீசார் ஒரு முக்கிய அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற காவல் உயரதிகாரிகள் மாநாட்டில்தான் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “உள்நாட்டு அரசியல் அழுத்தங்கள், பொருளாதார மேம்பாடு ஆகிய காரணங்களால் லடாக்கை கைப்பற்ற சீனா குறியாக உள்ளது. இதன் காரணமாக, லடாக் எல்லையில் ராணுவ வீரர்களை குவித்திருப்பதுடன் மட்டுமல்லாமல் ராணுவ உள்கட்டமைப்புகளையும் பல மடங்கு மேம்படுத்தியுள்ளது சீனா. இதனால், இதுவரை இல்லாத அளவுக்கு இனி லடாக்கில் சீனாவின் அத்துமீறல்களும், தாக்குதல்களும் அதிகரிக்கும். இதனால் இரு நாட்டு படையினர் இடையே மோதலும் அதிகரிக்கும். 2014-ம் ஆண்டில் இருந்தே ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் சீன அத்துமீறலின் தீவிரம் அதிகரித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து இந்திய ராணுவத்திடம் கேட்ட போது, எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.