செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஅறிவியல்ரேகை என்னும் மந்திரச்சாவி!

ரேகை என்னும் மந்திரச்சாவி!

Published on

spot_img
spot_img

அரசர்கள் காலக் கதைகளில், ராஜா யாரையாவது போகிற வழியில் பார்த்துவிட்டு, அந்த ஆளை அரசவைக்கு வந்து பார்க்கச் சொல்லுவார். அந்த ஆள் தன்னை எப்படி அனுமதிப்பார்கள் என்று அரசரிடம் கேட்கையில், தன் முத்திரை மோதிரத்தைக் கொடுத்து, இதைக் காண்பித்தால் வழிமறிக்க மாட்டார்கள் என்று அரசர் சொல்லுவார். பாதுகாப்பு என்பது இன்றைய தகவல்களால் இயங்கும் தொழில்நுட்ப உலகில் அத்தியாவசியம். கடவுச் சொற்களில் எதை எதற்கு வைத்தோம் என்று குழம்பித் தவிக்கிற காலகட்டத்தில் இருக்கிறோம். ஆனால் இன்றைய தொழில்நுட்பம் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக கைநாட்டுகளாக ஆக்கிக்கொண்டிருக்கிறது. மை தொட்டு பத்திரங்களில் நாட்டுவதைத் தவிரவும், கைரேகைகளுக்கு முக்கியமான உபயோகங்கள் இருக்கின்றன. அவை, விரல் தொடும் பரப்பைப் பற்றிய நுண்ணிய தகவல்களை மூளைக்குத் தருகின்றன. அவை இருப்பதால்தான், பட்டுப் புடவையை வருடி அதன் மென்மையை உணர முடிகிறது. தாடியை ட்ரிம் பண்ண வேண்டுமா? பாஸ் திட்டுவாரா என்று குளிப்பதற்கு முன் முடிவெடுக்க வைக்கிறது. கைகளின், விரல்களின் பரப்புகள் வெறுமனே தட்டையாக இருந்தால் இவையெல்லாம் தெரியாது. அதற்காகக்தான் தோல் அப்படியே நுண்ணிய மடிப்புகளாக உருவாகி ரேகைகளாக மாறியிருக்கிறது. ஒரே டி.என்.ஏ. உள்ள இரட்டையர்களுக்குக்கூட ரேகைகள் வேறுதான். ரேகையைப் பயன்படுத்துவது ஒன்றும் மனித குலத்துக்குப் புதிதல்ல. ஹம்முராபியின் சட்டங்களில் கைரேகை இட்டு சாசனங்களை முடித்திருக்கிறார்கள். இந்தக் கைரேகையைப் பற்றி அறிவியல்பூர்வமான ஆய்வு செய்த மூவரில், கிழக்கிந்தியக் கம்பெனியில் இருந்த எட்வர்ட் ஹென்றி என்ற ஆங்கிலேயருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அவரும், அவருடைய இரண்டு இந்திய உதவியாளர்களும் சேர்ந்து கணித ரீதியான வடிவம் கொடுத்தார்கள். ஹென்றி கைரேகை முறை பிரபலம். விரல் ரேகை பரிசீலிக்கும் நவீன தொழில்நுட்பம் வரை அவரின் தாக்கம் இருக்கிறது. Loop whorl arch என்பது, விரல் ரேகையில் இருக்கும் மடிப்புகள், சுழிகள், வளைவுகளைக் கொண்டு ஆராய்வது. இன்றைய ரேகை பரிசோதனைக் கருவிகள், ஒரு கைரேகையில் மேற்சொன்னவற்றையே தேடுகின்றன. முழு கைரேகையையும் உள்வாங்கி, மென்பொருட்கள் மூலம் மேற்சொன்ன அமைப்புகளை, நம் ரேகையில் தேடி, “சுழிக்கு கீழ செங்குத்தா ரெண்டு மில்லிமீட்டர் தள்ளி ஒரு வளைவு, அங்கேர்ந்து லெஃப்ட்ல நாலு மில்லி மீட்டர் தள்ளி ஒரு மடிப்பு” என்று குறித்து வைத்துக்கொள்கிறது. பின்னர் நாம் ரேகையைக் பதிக்கையில், “அட நம்ம செல்வம்!” என்று கண்டுபிடித்துவிடும். முறை ஒன்றுதானே தவிர, தொழில்நுட்பம் வேறு.

 

ஆரம்பகாலத் தொழில்நுட்பம் கேமரா உதவியால், ரேகையை படமெடுத்துக்கொண்டு, சேமிப்பில் இருக்கும் ரேகையோடு ஒப்பிட்டுப் பார்ப்பது. ஒரு கேமரா, ஒற்றை நிறத்தில் நம் ரேகையைப் படம் பிடிக்கும். பின் அந்த ரேகையில் மடிப்பு, சுழி, வளைவுகளை வேறு ஒன்றோடு ஒப்பிடும். இந்த முறை எளிமையானது. ஆனால், கைரேகையின் படத்தைக்கூட நம்பி வழிவிட்டுவிடும். ஆனாலும், அதிகம் உபத்திரவமில்லாத இடத்தில் இன்னும் இவற்றையே பயன்படுத்துகிறார்கள். ஆனால், முப்பட்டகக் கண்ணாடி, விளக்குகள் எல்லாம் தேவைப்படுவதால், கைபேசிகள், மடிக்கணினிகள் போன்ற கருவிகளுக்குச் சரியாக வராது. மேலும் இந்தக் கருவியை ஏமாற்றுவதும் எளிதுதான். அதற்குத் தீர்வாகத்தான் capacitive fingerprint sensor வந்தது. கெப்பாசிட்டன்ஸ் (capacitance) என்றால் மின்தேக்குத் திறன். ஒரு பொருளால் எவ்வளவு மின்சாரத்தைச் சேமித்துவைக்க முடியும் என்பதன் அளவீடு அது. இவை எடை குறைவாக, அதேசமயம் துல்லியமாக இருந்தன. நம் விரலின் ரேகைகளைவிட சிறிய மின்தேக்கிகளின் மூலம் ஒரு மெல்லிய பரப்புக்கு மின்சாரம் பாயச் செய்து மின்னேற்றம் கொடுத்திருப்பார்கள். அந்தப் பரப்பில் நாம் விரலை ஒற்றுகையில், ரேகையின் மேடு மற்றும் பள்ளங்களில் உறிஞ்சப்படும் மின்னேற்றம் மாறும். காரணம், மேடுகளில் நேரடியாகத் தோலும், பள்ளங்களில் காற்றும் அந்தப் பரப்பின் மீது படும். அந்த மின்னேற்ற மாறுதலை அளந்து அதன்மூலம் கைரேகையின் வரைபடத்தை அந்தக் கருவி உருவாக்கிக்கொள்ளும். பின் அதையே ஒவ்வொருமுறைக்கும் ஒப்பிட்டுப் பார்க்கும். இதுதான் தற்போது பெரும்பாலான கைபேசிகளில் புழக்கத்தில் இருப்பது. இந்த முறையின் சிக்கல் என்னவெனில், அந்த மின்னேற்றம் பெற்ற பரப்பில் நேரடியாக விரல்கள் பட வேண்டும். அடுத்தகட்ட தொழில்நுட்பமாக, மீயொலியின் (ultrasonic) மூலம் ரேகை அறியும் கருவிகள் வந்திருக்கின்றன. Qualcomm என்ற நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. மீயொலிகளை எழுப்பும் ஒரு கருவி, மோதித் திரும்பும் அலைகளை உணரும் ஒரு அதிர்வுணர்வி ஆகியவற்றால் இயங்குகிறது. நாம் விரலை ஒற்றுகையில், மீயொலிகள் உருவாகி விரலோடு மோதும். அந்த மோதலில் சில அலைகள் உறிஞ்சப்படும்; மீதி எதிரொலிக்கப்படும். அந்த எதிரொலி, கருவியினுள் ஏற்படுத்தும் அதிர்வை வைத்து, மேடு பள்ளம் எல்லாம் அறியப்படும். பின்னர் அதை ஒவ்வொரு முறை பெறப்படும் ரேகையோடு ஒப்பிடும். ரேகை அறிதல், தகவல் பாதுகாப்பில் ஒரு முக்கிய மைல்கல். எல்லாத் தொழில்நுட்பமும்போல இதிலும் சில பின்னடைவுகள் இருக்கத்தான் செய்கின்றன. சில பேர் நம் விரலை வெட்டி எடுத்துப்போய் பயன்படுத்த முடியும் என்ற அளவுக்கு யோசிக்கிறார்கள். மின்தேக்கிகள் மூலம் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தில், அந்த விரல் உயிருள்ள ஒரு உடலில் பொருந்தியிருக்கிறதா என்றுகூட சருமத்தின் மின்கடத்துப் பண்புகளை வைத்துச் சொல்லிவிடும். அடுத்து நாம் தூங்கும்போது, நம் ரேகையைப் பயன்படுத்தி நம்முடைய கருவிகளில் இருந்து தகவலைத் திருட முடியும் என்று அஞ்சுகிறார்கள். உண்மைதான். ஆனால், எந்தத் தொழில்நுட்பமும் நூறு சதம் துல்லியமானது இல்லை. பார்க்கப்போனால், பாதுகாப்பு என்ற அம்சமே பொருட்களுக்கானது இல்லையே; நம் மனதுக்கானதுதானே…

Latest articles

உயிரிழந்த ஹமாஸ் படைத் தளபதி ….

மேற்கு கரையில் இடம்பெற்ற மோதலில் உள்ளூா் ஹமாஸ் படைத் தளபதி உட்பட 2 பலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

மன்னர் சார்லஸுன் படத்துடன் வெளியாகும் பிரித்தானிய பணம்….

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். இதனிடையே மன்னர் சார்லஸுன் படத்துடன்...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் இந்த தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. குரோதி வருடத்திற்கான பலன் இந்த ஆண்டு...

இலங்கையை வந்தடைந்த‌ கிரிஸ்டல் செரினிட்டி சொகுசு கப்பல்……

இன்று (13) காலை கிரிஸ்டல் செரினிட்டி என்ற சொகுசு கப்பல் இந்தோனேசியாவிலிருந்து 265 பயணிகள் மற்றும் 480 பணியாளர்களுடன்...

More like this

உயிரிழந்த ஹமாஸ் படைத் தளபதி ….

மேற்கு கரையில் இடம்பெற்ற மோதலில் உள்ளூா் ஹமாஸ் படைத் தளபதி உட்பட 2 பலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

மன்னர் சார்லஸுன் படத்துடன் வெளியாகும் பிரித்தானிய பணம்….

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். இதனிடையே மன்னர் சார்லஸுன் படத்துடன்...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் இந்த தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. குரோதி வருடத்திற்கான பலன் இந்த ஆண்டு...