ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளில் இதுவரை 20 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. ரூ.10 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கக் கட்டிகளை கடலோர காவல் படையினர் மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திற்கு மன்னார் வளைகுடா கடல் வழியாக தங்கம் கடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது, வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் தென்கடல் பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மண்டபத்தைச் சேர்ந்த ஒரு பைபர் படகு, மண்டபம் தென் துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்படத்தை நிறுத்தி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய முயன்றபோது, அதில் இருந்தவர்கள் திடீரென படகில் இருந்து ஒரு மூட்டையை கடலில் தூக்கி போட்டனர். இதையடுத்து அப்படகை இந்திய கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்தனர். படகில் இருந்து 3 பேரை பிடித்து மண்டபம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் வேதாளத்தை சேர்ந்த ஒருவருக்கு இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளை கடத்தி வந்ததாகவும், கடலில் ரோந்து படகை கண்டதும், தங்கக்கட்டி மூட்டையை கடலுக்குள் வீசியதும் தெரிந்தது. இதன்படி படகில் இருந்து கடலில் வீசிய மூட்டையை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல் படை வீரர்கள் 2 நாட்களாக தீவிரமாக தேடினர். இந்நிலையில், ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளில் இதுவரை 20 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.