ரஷ்ய – உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக உக்ரைன் உச்சி மாநாடு ஒன்றை அடுத்த மாதம் (ஓகஸ்ட்) நடத்த முடிவு செய்துள்ளது.
இதற்காக கடந்த மே மாதம் நடைபெற்ற அரபு லீக் மாநாட்டில் உக்ரைன் அதிபர் கலந்து கொண்டார்.போர் தொடங்கியது முதல் அரபு நாடுகள் நடுநிலை வகித்து வருகின்றமையால் இந்தப் போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வழிவகை செய்ய உதவுமாறு உக்ரைன் அதிபர் கேட்டுக்கொண்டார்.
அதன்படி இதற்கான ஏற்பாடுகளை சவுதி அரேபியா அரசாங்கம் செய்து வருகிறது.இந்த உச்சி மாநாடு செங்கடல் அருகே உள்ள துறைமுக நகரமான ஜெட்டாவில் நடைபெறவுள்ளது.
இதில் உக்ரைன், பிரேசில், இந்தியா உட்பட சுமார் 30 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் அமெரிக்கா சார்பில் அதிபர் ஜோ பைடனின் உயர் மட்ட அதிகாரி ஒருவரும் கலந்து கொள்ளவுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மாநாட்டில் ரஷ்யா பங்கேற்குமா என்பது உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கான திகதி உள்ளிட்ட மற்ற விடயங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும் இந்த மாநாடு போரை நிறுத்த உதவுமா? என உலக நாடுகள் எதிர்பார்ப்பில் உள்ளன.