புத்தாண்டு தினத்தில் ரஷ்யாவுடனான சிறை பரிமாற்றத்தில் விடுவிக்கப்பட்ட பின்னர், உக்ரேனிய கைதிகள் ஆனந்தக் கண்ணீருடன் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கைதிகள் பரிமாற்றம்
ரஷ்யா – உக்ரைன் இடையே 300 நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், தற்போது இரு நாடுகளும் 200க்கும் மேற்பட்ட வீரர்களை விடுவித்தன. உக்ரைன் மொத்தம் 82 ரஷ்ய வீரர்களை விடுவித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்தது. அதேபோல், ரஷ்யா 140 உக்ரேனியர்களை ஒப்படைத்ததாக உக்ரைன் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியான Andriy Yermak தெரிவித்தார்.
அவர்களில் 132 பேர் ஆண்கள் மற்றும் 8 பேர் பெண்கள் என்றும், அவர்கள் அனைவரும் மரியுபோல் மற்றும் பாம்புத் தீவில் பாதுகாக்க போராடினார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வீரர்கள் கொண்டாட்டம்
உக்ரைன் வீரர்கள் விடுவிக்கப்பட்டதை கொண்டாடினர். அவர்களில் பலர் காற்றில் கைகளை உயர்த்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், புத்தாண்டு தினத்தில் நடந்த இந்த கைதி பரிமாற்றத்தின் போது ‘உக்ரைனின் மகிமை’ என்று கூச்சலிட்டு ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.
மாஸ்கோவிற்கும், கீவ்விற்கும் இடையே பேச்சுவார்த்தைகளில் முழுமையான முறிவு ஏற்பட்ட போதிலும், இந்த வீரர்கள் பரிமாற்றம் நடந்துள்ளது.