ரஷ்யாவில் நடைபெற்று வரும் பனி வீடு கட்டும் போட்டியில் 2500க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று இக்லூ எனப்படும் பனிமனிதர்களின் கூடாரங்களை வடிவமைத்து அசத்தியுள்ளனர். இக்லூ என்பது கிரீன் லாண்ட் மற்றும் கனடாவின் இன்லுட் பழங்குடி மக்களின் பாரம்பரிய குடியிருப்புகளாகும். முற்றிலும் பனிக்கட்டிகளை கொண்டு வீடுகளை அவர்கள் வடிவமைத்துக் கொள்வார்கள். இந்நிலையில் இதே பாணியிலான இக்லூ வீடுகள் கட்டுவதை ஒரு போட்டியாகவே ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்பட்டு வருகிறது.
ரஷ்யாவில் உள்ள நோவோசிபிர்ஸ்க் பகுதியில் 13வது இக்லூ பனிவீடு வடிவமைக்கும் போட்டி விமர்சியாக நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,500 பேர் இதில் கலந்து கொண்டனர். அறுவைக் கருவிகள், இயந்திரங்கள் மற்றும் மண்வெட்டிகளுடன் களமிறங்கிய 327 அணியினர், நோவோசிபிர்ஸ்க் பனி பிரதேசம் முழுவதும் 198 இக்லூ பனிவீடுகளை போட்டிபோட்டுக்கொண்டு கட்டினர். சிறந்த இக்லூ பனி வீட்டிற்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து போட்டியில் பங்கேற்ற பெண் ஒருவர், இது ஒரு அசாதாரண பனிக் கட்டடம். அனைவராலும் இதனை உருவாக்கிவிட முடியாது. இது ஒரு சுவாரஸ்யமான உள்ளமைவைக் கொண்டுள்ளது. பனிக்கட்டி குடிசை என்பதால் உள்ளே கடுங்குளிர் நிலவும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அப்படி இல்லை. இரவு முழுக்க இதில் நாங்கள் தங்கியிருந்தோம். உள்ளே வெப்பமாகத்தான் இருக்கிறது என்று தெரிவித்தார்.