கிரீஸ் நாட்டில் ரயில்கள் மோதி நடைபெற்ற விபத்தை அடுத்து நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே வன்முறை வெடித்தது. கிரீஸ் நாட்டில் வடக்கு பகுதியில் சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 57 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து தலைநகர் எய்தன்சில் மாணவர்கள், ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர்கள் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர்.
ரயில்வேத்துறைக்கு போதிய நிதி ஒதுக்காததும், ஒழுங்கான பாதுகாப்பு வழிமுறையும் இல்லாதது தான் விபத்துக்கு காரணம் என அவர்கள் குற்றம்சாட்டினர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் முற்பட்டதால் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். சிலர் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த இடத்தில் வன்முறை சம்பவம் அரங்கேறியுள்ளது.