பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்காக ஒவ்வொருவருக்கும் தலா 5,000 ரூபா விசேட நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
இம்மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பார் என்று தெரியவருகிறது.
இந்நிலையில் இந்திய அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் குறித்து இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் ” கடந்த மாதம் 11 ஆம் திகதி, யாழ்ப்பாணம் மத்திய கலாசார மத்திய நிலையத்தை யாழ்ப்பாண மக்களுக்கு உவந்தளிக்கும் நிகழ்வுக்கு இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதியாக வந்திருந்த இராஜாங்க கலாநிதி எல். முருகன் அறிவித்த படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 100 பேருக்கு விசேட நிதியுதவியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் தெரிவு செய்யப்பட்டு முன்மொழியப்படும் ஒவ்வொரு மாணவனுக்கும் நடப்புக் கல்வி ஆண்டில் இருந்து, அடுத்து வரும் ஒரு வருட காலத்துக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களில் இருந்தும் இளநிலைப் பட்டதாரி மற்றும் பட்ட பின் மாணவர்கள் இத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்படலாம். மேலும் நான்கு இளநிலை மாணவர்களுக்கு ஒரு பட்டப்பின் படிப்பு மாணவர் என்ற அடிப்படையில் தெரிவு இடம்பெறும்.
இதற்கென இந்தியத் தூதரகத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கமைய பொருளாதார நிலையில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டம் பற்றிய இந்தியத் தூதுவரின் கடிதம் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாணவர் நலச்சேவைகள் பணிப்பாளர் பேராசிரியர் கே. சசிகேஷ் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.