வெளிநாடு செல்பவர்களை ஆசை வார்த்தை காட்டி அவர்களிடம் பணமோசடி செய்யும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்த வண்ணமுள்ளன.
அந்த வகையில் யாழ்.மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இவ்வகையான மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் பெருமளவில் குவிந்துள்ளதாகவும் எனவே இவ்வாறு ஏமாற்றுபவர்கள் தொடர்பில் தகவல் அளிக்குமாறும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெளிநாட்டிற்கு செல்லும் இளைஞர், யுவதிகள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால், (காட்டுக்கந்தோர்) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உள்ளது. அங்கு தேவையான விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்வோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ளதுடன் இந்த தொழிற்பயிற்சி நிலையம், வடமாகாணத்திற்கான நிலையமாக அமைக்கப்படவுள்ளது.அதற்குரிய காணியை ஒழுங்குபடுத்தி தருமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியுள்ளேன்.
யாழில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான க்ளோகல் 2023 கண்காட்சி மூலம் வெளிநாட்டிற்கு செல்லும் இளைஞர் யுவதிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆட்கடத்தல் மற்றும் பணத்தை ஏமாற்றுபவர்கள் தொடர்பில் அறிவதற்கும், இளைஞர்கள் விழிப்படையவும் இந்த க்ளோகல் 2023 கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.