எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி அல்லது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஸ்டரோ (strow),கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், கரண்டிகள், இடியப்ப தட்டு, மாலைகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்ரிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டினுள் அவற்றின் உற்பத்தி, உள்ளூர் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல் , இலவசமாக வழங்குதல் அல்லது காட்சிப்படுத்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதால்,அந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் விதிகளின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய பெருட்களை விற்பனை செய்தல் அல்லது பயன்படுத்தல் அரச சட்ட விதிகளுக்கு எதிரானது என்பதால், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சகல வியாபார நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் உட்பட்ட சகல தரப்பினரும்,
இவ் அறிவித்தலை உரிய முறையில் கடைப்பிடிக்குமாறு தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் இவ் அறிவித்தலை மீறுவோர் மீது உரிய சட்ட ஏற்பாடுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.