யாழ்., கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருபாலைப் பகுதியில் இயங்கி வரும் கானான் ஜெப ஆலயத்தின் மாணவர் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்ட 80 வயதான போதகர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கானான் ஜெப ஆலயத்தின் கட்டுப்பாட்டிலிருந்த மாணவர் விடுதி வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அனுமதியுடன் மாத்திரமே இயங்கியது.
சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் அனுமதியைப் பெறாமல் சட்டவிரோதமாகச் செயற்பட்டிருந்தது. சிறுவர் இல்ல சிறுமிகள் 3 பேர் தப்பித்துச் சென்றதையடுத்து இந்த விடயம் அம்பலமாகியிருந்தது. அங்கிருந்த சிறுமிகள் வேறு இல்லத்துக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
சிறுமிகளிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஆலயத்தின் தலைமைப்போதகர் தம்மிடம் தகாத முறையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகத் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து 80 வயதான தலைமைப் போதகரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்த போதும் அவர் தலைமறைவாகியிருந்தார்.
இந்தநிலையில் கொழும்பில் நேற்றுக் கைது செய்யப்பட்ட போதகரை உடனடியாகவே அங்கு நீதிமன்றில் முற்படுத்தியபோது அவரது கடவுச்சீட்டை முடக்கிய மன்று பிணையில் விடுவித்தது. யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றில் உடனடியாக சரணடையுமாறும் அறிவுறுத்தியுள்ளது.