யாழ்ப்பாணத்தில் பயிரிடப்படும் இயற்கை புளிப்பு வாழைப்பழங்களின் முதல் தொகுதியை இம்மாதம் 28ஆம் திகதி முதல் ஒவ்வொரு வாரமும் துபாய் சந்தைக்கு அனுப்ப விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி யாழ்ப்பாணத்தில் 350 ஏக்கரில் பயிரிடப்பட்ட 25,000 கிலோகிராம் கரிம புளிப்பு வாழைப்பழங்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் வாரந்தோறும் துபாய் சந்தைக்கு அனுப்ப விவசாய அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் புளிப்பு வாழைப்பயிர் செய்கின்ற 600 விவசாயிகள் உள்ளதாகவும், மேலும் 650 ஹெக்டேயருக்கு பயிர்ச்செய்கையை விரிவுபடுத்த உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், இந்த வருடத்தில் அம்பிலிப்பிட்டிய மற்றும் ஹம்பாந்தோட்டையை அண்மித்த பகுதிகளில் புளிப்பு வாழை ஏற்றுமதி வலயத்தை நிறுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், செவனகல பிரதேசத்தில் வாழைப்பழ பதப்படுத்தும் நிலையத்தை அமைப்பதற்கு 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது ராஜாங்கனையில் வாழைப்பழ பதப்படுத்தும் நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் பதப்படுத்தும் நிலையத்தின் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ராஜாங்கனையில் புளிப்பு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டுக்கு 20,000 டொலர்கள் ஏற்றுமதி வருமானமாக கிடைப்பதாகவும், யாழ்ப்பாணத்தில் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்வதன் மூலம் வாரந்தோறும் 40,000 டொலர் வருமானம் நாட்டுக்கு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது:
விவசாய அமைச்சின் கீழ் விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதி பங்களிப்பின் கீழ் புளிப்பு வாழை ஏற்றுமதி வலயங்களை நம் நாட்டில் நிறுவும் வேலைத்திட்டத்தின் கீழ் ராஜாங்கனையில் 18 முறை புளிப்பு வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தற்போது வெளிநாட்டு சந்தையில் புளிப்பு வாழைப்பழத்திற்கு அதிக கிராக்கி உள்ளது, ஆனால் இன்னும் நம் நாட்டில் விவசாயிகள் சர்வதேச தரத்திற்கு ஏற்ப வளராததால், ஒட்டுமொத்த தேவையை ஒப்பிடும்போது வழங்குவதில் சிரமங்கள் உள்ளன.
ஆனால் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தினால் வழங்கப்படும் தொழிநுட்பப் பயிற்சியினால் சர்வதேச தரத்திற்கமைவாக புளிப்பு வாழை பயிரிடப்படுகிறது.யாழ்ப்பாணத்தில் புளிப்பு வாழை சாகுபடிக்கு இரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. அதற்கு அந்த விவசாயிகள் இயற்கை உரங்களையே பயன்படுத்துவதால், யாழ்ப்பாணத்தின் புளிப்பு வாழைக்கு எதிர்வரும் காலங்களில் ஏனைய நாடுகளில் இருந்து அதிக வருமானம் கிடைக்கும்.