மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் கடந்த 14ம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் மியான்மரின் கியாக்பியு மற்றும் வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் வழியாக கரையை கடக்கத் தொடங்கியது.
புயல் கரை கடந்த போது வங்கதேசம் மற்றும் மியான்மரில் உள்ள கடலோர பகுதிகளில் மணிக்கு 200 கிமீ வேகத்தில் சூறாவளியுடன் கனமழை பெய்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் பல கிராமங்கள் அழிந்தன, மரங்களை வேரோடு பிடுங்கப்பட்டன மற்றும் ராக்கைன் மாநிலத்தின் பெரும்பகுதி முழுவதும் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டன. மேலும் இந்த புயலால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமான மின்கம்பங்கள் விழுந்தன மற்றும் மர மீன்பிடி படகுகள் புயலால் சூறையாடப்பட்டன.
இந்நிலையில், மியான்மரில் மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. அங்குள்ள ராக்கென் மாகாணத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.