மூணாறு பகுதியில் ரேஷன் கடைகளை குறி வைக்கும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரளா மாநிலம், மூணாறின் எஸ்டேட் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டு யானைகள் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்தாக மாறியுள்ளன. குறிப்பாக இப்பகுதிகளில் சுற்றித்திரியும் அரிசி கொம்பன் காட்டு யானை நேற்று முன்தினம் இரவு, ரேஷன் கடையை அடித்து உடைத்து அரிசியை தின்று தீர்த்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 15 முறை இந்த ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானை குருசாமி என்பவரது வீட்டின் சமையலறையை இடித்து சேதப்படுத்தியது. அப்பகுதியில் பீதி ஏற்படுத்திய ஒற்றை யானையை உள்ளூர்வாசிகள் மற்றும் வனத்துறையின் விரைவு அதிரடிப்படையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர். அரிசி கொம்பன் யானை இதுவரை 12 பேரை தாக்கி கொன்றுள்ளது.
மூணாறில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கன்னிமலை எஸ்டேட்டில் நேற்று அதிகாலை மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம், 53ம் எண் ரேஷன் கடையை அடித்து உடைத்தது. மேலும் 3 சாக்கு மூட்டைகளில் இருந்த கோதுமையை தின்று தீர்த்தது. கடந்த 6 மாதங்களில் 4வது முறையாக ரேஷன் கடைகளை காட்டு யானை கூட்டம் சேதப்படுத்தியுள்ளது. எனவே, காட்டு யானை தாக்குதல் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.