வெலிகம பெலேன உரக் கிடங்கின் கடவு வாயிலில் பயணித்த முச்சக்கர வண்டியும் புகையிரதம் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் 8039 வெலிகம புகையிரத நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது, புகையிரத கடவையில் முச்சக்கர வண்டி நேற்று பிற்பகல் புகையிரதத்துடன் மோதியுள்ளது.
முச்சக்கரவண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மூன்று பிள்ளைகளும் மற்றுமொரு உறவினரும் பயணித்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகள், அவர்களின் தாய் மற்றும் உறவினர் உட்பட நால்வர் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த 9 வயது குழந்தை மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் ஏழு வயது குழந்தை கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் வெலிகம பெலியான மோதர வத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொல்வத்துமோதர கல்லூரியில் கல்வி கற்கும் மூன்று பிள்ளைகளையும் அவர்களது தாயார் முச்சக்கர வண்டியில் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.