ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிஆர்பிஎப் ஜவான்கள் மீது மாவோயிஸ்டுகள் வெறித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தினர். மாவோயிஸ்டுகளான மோதலின் போது கண்ணிவெடியில் சிக்கி நமது சிஆர்பிஎப் வீரர்கள் 5 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தியாவில் ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்துவோம் என்பது மாவோயிஸ்டுகளின் கொள்கை. நாட்டின் பல மாநிலங்களில் ஒருகாலத்தில் மாவோயிஸ்டுகள் ஆயுதங்கள் மூலம் செல்வாக்கு செலுத்தி வந்தனர். மாவோயிஸ்டுகளின் பிரதான கேடயமாக பழங்குடி மக்கள்தான் இருந்து வந்தனர்.
ஆனால் மாவோயிஸ்டுகளின் புகலிடமாக இருந்த மலைப்பகுதிகள், பழங்குடி வாழ்விடங்களுக்கும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் சென்று சேர்ந்தன. இதனால் இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டமே பெருமளவு குறைந்துவிட்டது. மாவோயிஸ்டுகள் பெருமளவு ஒடுக்கப்பட்டுவிட்டனர். ஆந்திரா, ஒடிஷா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார், மே.வங்கம் ஆகிய மாநிலங்களில் சில மாவட்டங்களின் மலைகளில்தான் தற்போது மாவோயிஸ்டுகள் பதுங்கி இருக்கின்றனர்.
நாடாளுமன்ற லோக்சபாவில் சில மாதங்களுக்கு முன்னர் இடதுசாரி பயங்கரவாதிகளால்- மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்திருந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், இடதுசாரி பயங்கரவாத அச்சுறுத்தலை முழுமையாக எதிர்கொள்ள, தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டம் 2015-ல் தொடங்கப்பட்டது. பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள், மேம்பாட்டுத் தலையீடுகள், உள்ளூர் சமூகங்களின் உரிமைகளை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய பல்முனை உத்தியை இது வழங்குகிறது. வளர்ச்சியை பொறுத்தவரை, சாலைக் கட்டமைப்பை விரிவாக்குவதல், தொலைத்தொடர்பு இணைப்புகளை மேம்படுத்துதல், உள்ளூர் மக்களின் நிதி உள்ளடக்கம், இடதுசாரி பயங்கரவாதம் பாதித்த பகுதிகளில் திறன் மேம்பாடு மற்றும் கல்வி வசதிகள் உள்ளிட்டவற்றில் சிறப்பு முனைப்புடன் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.
இத்தகைய பகுதிகளில் 16,200 கி.மீ.க்கும் அதிகமான சாலைகளுக்கு குறிப்பிட்ட திட்டங்களின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 10,600 கி.மீ. சாலைகள் சுமார் ரூ 13,000 கோடி மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளன. இடதுசாரி பயங்கரவாதம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான கைபேசி இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 2,343 மொபைல் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 2,542 டவர்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 4,312 அலைபேசி கோபுரங்களுக்கு முன்னேற விழையும் மாவட்டங்களுக்கான திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக, 47 மாவட்டங்களில் தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (ஐடிஐ) மற்றும் 34 மாவட்டங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் ரூ 407 கோடி மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இடதுசாரி பயங்கரவாதம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இது வரை அங்கீகரிக்கப்பட்டுள்ள 234 ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 99 பள்ளிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், இத்தகைய அனைத்து மாவட்டங்களிலும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன என பட்டியல் வாசித்தார். மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் மாவோயிஸ்டுகளின் இருப்பிடமே கேள்விக்குறியாகிவிட்டது. இருப்பினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாதுகாப்பு படையினரை சீண்டும் நடவடிக்கைகளில் அவ்வப்போது மாவோயிஸ்டுகள் ஈடுபட்டு வருகின்றனர்.ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசா மாவட்டத்தில் இன்று சிஆர்பிஎப் வீரர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே சரமாரி துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த மோதலின் போது நமது சிஆர்பிஎப் வீரர்கள் 5 பேர் கண்ணிவெடியில் சிக்கி படுகாயமடைந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.