மார்பில் பாய்ந்த 3 அடி நீள மரக்கட்டையை அகற்றி இளைஞரின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களை ராஜிவ் காந்தி மருத்துவமனை டீன் தேரணிராஜன் நேரில் அழைத்து பாராட்டினார். லாரி டிரைவான சங்கர் (27) என்பவர், கடந்த 5ம் தேதி ஆவடி நோக்கி லாரியை வேகமாக ஓட்டி வந்துள்ளார்.
அதிகாலை 2.30 மணியளவில் திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் டிரைவர் சங்கரின் வலது பக்க மார்பு பகுதியில் சுமார் 3 அடி நீள மரக்கட்டை பாய்ந்து முதுகின் பின்புறம் வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். பொதுமக்கள் அவரை மீட்டு ஆவடி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன்படி, அதிகாலை 5.50 மணியளவில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
இதையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்படி காலை 6 மணியளவில் அவருக்கு இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி மரக்கட்டையை அகற்றினர்.
ஆனாலும் ரத்த கசிவு நிற்காததால் அவரின் வலது பக்கம் உள்ள நுரையீரலில் கீழ் பாதியை அகற்றி ரத்த கசிவை நிறுத்தினர். தொடர்ந்து, ஆபத்தான நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார். தற்போது, உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை அளித்த இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நந்தகுமார், செந்தில், அஜய் மற்றும் செவிலியர்களை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜன் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் தனது உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு டிரைவர் சங்கர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.