அரசியல் உங்களை வழிநடத்தக்கூடாது, நீங்கள் அரசியலை வழிநடத்தவேண்டும் என்று தாம்பரம் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசுகையில், ‘நான் உங்களுக்கு அறிவுரை கூற வரவில்லை. எனது அனுபவத்தை தெரிவிக்க வந்துள்ளேன். நான் என்ன செய்யவேண்டும் என எனது பெற்றோர் நினைத்து செயல்படவில்லை.
அதனால்தான் இங்கு நிற்கிறேன். என்னைபோல் நீங்கள் சிந்திக்கவேண்டாம். மாணவர்கள் கண்டிப்பாக ஓட்டுபோடவேண்டும். அரசியல் உங்களை வழிநடத்தக்கூடாது. நீங்கள் அரசியலை வழி நடத்தவேண்டும். 100 சதவீத மாணவர்கள் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றவேண்டும்’ என்றார். பின்னர், மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அன்பே சிவம் பாடலை பாடினார். அதன்பின்னர் மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.