சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் மற்றும் கேசவ பெருமாள் கோயில் அருகே உள்ள சித்திரக்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையில் மிகவும் பழமைவாய்ந்த கோயில் கபாலீஸ்வரர் திருக்கோயில் ஆகும். இந்த கோயிலின் பின்புறம் தெப்பக்குளம் உள்ளது. தொடர் மழையினால் தெப்பக்குளத்துக்கு அடித்துவரப்பட்ட குப்பை கழிவுகள் நிரம்பி காணப்படுகிறது.மேலும், மீன்கள் இறந்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோயிலுக்கு வருகின்ற பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
மேலும், கேசவ பெருமாள் கோயிலில் உள்ள தெப்பக்குளத்திலும் மழையில் அடித்துவரப்பட்ட குப்பை கழிவுகள் மற்றும் மீன்கள் இறந்து மிதப்பதால் ஏற்படும் துர்நாற்றத்தால் அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்கள் கபாலீஸ்வரர் கோயிலின் தெப்பக்குளத்த்தில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளையும் மற்றும் இறந்து மிதக்கும் மீன்களையும் உடனே அகற்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.