இளம் மனைவிக்கு இன்சுலின் ஊசியை பலவந்தமாக செலுத்தி கொலை செய்ய முயற்சித்த வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இச் செயலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.இதனடிப்படையில் பம்பலப்பிட்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான இன்சுலின் ஊசி மூலம் மயக்கமடைந்த பெண் ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
திருமணமாகி சில காலம் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால் மனைவி மருத்துவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மருத்துவர் அடிக்கடி வீட்டுக்கு வருவதில்லை என பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சந்தேகத்திற்குரிய வைத்தியர் குழந்தை இல்லாத காரணத்தினாலும் அடிக்கடி தகராறு செய்த காரணத்தினாலும் மனைவியை கொல்லும் நோக்கில் இவ்வாறு செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
உடலில் சக்கரை அளவைக் குறைக்க மனைவியின் உடலில் இன்சுலின் ஊசியை வலுக்கட்டாயமாக செலுத்தி மனைவியைக் கொல்ல முயன்றதாக பொலிஸ் வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் தெரியவந்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரான வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.