நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் கால்நடைகளுக்கு புதிய நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக கால்நடைகள் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளதுடன் பால் உற்பத்தி வெகுவாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நோய்த் தாக்கம் கடந்த காலங்களில் வட மாகாணத்தில் பதிவாகியிருந்தது.இந்த நோய் தற்போது மத்திய மாகாணத்திலும் பரவ ஆரம்பித்துள்ளதாக பண்ணையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, இந்த நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகள் இதுவரையில் கால்நடைகளுக்கு வழங்கப்படவில்லை என சில பண்ணையாளர்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த நோய்த் தாக்கம்குறித்து எமது செய்திச் சேவை, இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் சௌந்தரராசா சுகிர்தனை தொடர்பு கொண்டு வினவியது.
இதற்கு பதிலளித்த அவர், நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் அது தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்தார்.