மத்திய பிரதேசத்தின் சாகர் நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் கடைக்காரர்கள் சிலர், ஒரு பெண்ணை ஈவு இரக்கமின்றி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஒரு கடையின் முன்பு பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை தரையில் படுக்க வைத்துவிட்டு அருகில் அமர்ந்துள்ளார். அங்கு அமரக்கூடாது எனக் கூறி ஒருவர் அந்த பெண்ணை தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். மற்றொருவர் அந்த பெண்ணை எட்டி உதைத்துள்ளார். வலி தாங்காமல் அழுத அந்த பெண்ணை இன்னொருவர் கம்பியால் அடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானது. இதையடுத்து பொலிஸார் விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து பொலிஸ் அதிகாரி லோகேஷ் சின்ஹா கூறும்போது, “பேருந்து நிலையத்தில் கடை வைத்திருப்பவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அந்த பெண்ணை அங்கிருந்து செல்லும்படி கூறி உள்ளனர். போகாததால் தாக்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணை கண்டுபிடித்து, நடந்த சம்பவம் பற்றி அவரிடம் விசாரித்து வாக்குமூலம் பெறப்படும்” என்றார்.