இந்தியாவின் மணிப்பூரில் கலவரத்தின் போது காணாமல் போன மெய்தி இனத்தைச் சேர்ந்த இரு மாணவர்களை குகி இனத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுக்கள் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
மணிப்பூரில் கடந்த மே மாதம் மெய்தி இன மக்களுக்கும், குகி இன மக்களுக்கும் இடையே மோதல் ஆரம்பித்து மிகப்பெரிய கலவரமாக மாறியுள்ள நிலையில் இதுவரை 200 இற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியதுடன் ஆயிரக்கணக்கானோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே மெய்தி இன மக்களில் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் பற்றிய விபரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதன் அடிப்படையில் சி.பி.ஐ. மற்றும் விசாரணைக்குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
சுட்டுக் கொல்லப்பட்ட குறித்த மாணவர்களது புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு இருந்த நிலையில் அவர்களுடைய நிலைமை என்னவானது என்று தெரியாமலிருந்த நிலையில் திங்கட்கிழமை இரவு (25) அவர்கள் பற்றிய பரபரப்பு செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவின.
குறித்த மாணவர்களில் ஒருவர் 17 வயதான ஹிஜம் மற்றும் 20 வயதான பிஜம் இருவரும் முகாம் ஒன்றில் புல்வெளி தரையில் உட்கார வைத்து இருப்பது போன்ற காட்சியும், அவர்களுக்கு பின்னால் ஆயுதம் ஏந்தி சிலர் நிற்பது போன்ற காட்சியும் காணொளி மூலம் பரபரப்பாக பரவியது.
அதே காணொளியில் அடுத்த சில நிமிடங்களில் அந்த 2 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்று இருந்தது.இந்த காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்ற நிலையில் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் உருவாகியிருக்கிறது.
மாணவர்கள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கும் காட்சி பற்றி அரசு விசாரணை தொடங்கி உள்ளது. அந்த 2 பேரையும் குகி இனத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுக்கள் சுட்டு கொன்று இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுபற்றி அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த ஜூலை மாதம் அந்த 2 மாணவர், மாணவி காணாமல் போனது பற்றி விசாரணை நடத்தி வந்தோம். ஏற்கனவே அவர்கள் தொடர்பான வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொல்லப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்” என்று கூறினார்.
மற்றொரு அரசு உயர் அதிகாரி கூறுகையில், ” மாணவர், மாணவியைக் கொன்றவர்கள் மீது உறுதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.இதேவேளை பொது மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று மணிப்பூர் மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.