அன்டநானரிவோ, ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் இருந்து பிரான்ஸ் நாட்டின் மயோட் தீவு நோக்கி ஒரு படகு சென்று கொண்டிருந்தது. சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் இந்த பயணங்கள் பெரும்பாலும் ஆபத்தானதாக அமைந்து விடுகின்றன. மொத்தம் 47 பேர் இந்த படகில் பயணம் செய்தனர். அப்போது இந்த படகு திடீரென கடலில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் உடனடியாக கடலுக்குள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கு கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மாயமான சிலரை கண்டுபிடிக்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.